நாசாவையே மிரளவிட்ட அதிசயம்.. 22 ஆண்டுகள் பிரபஞ்சத்தை ஆண்ட Space Telescope!
22 ஆண்டுகள் பிரபஞ்சத்தை ஆண்ட நாசாவின் ஸ்விஃப்ட் விண்வெளித் தொலைநோக்கி, தனது பயணத்தை முடித்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. காமா கதிர் வெடிப்புகள், சூப்பர்நோவா, கருந்துளைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த இந்த சாதனமானது, தனது ஆயுட்காலத்தை மீண்டும் நீட்டிக்க முயற்சித்தும் தோல்வியடைந்தது.
செய்தியாளர் - M.மீரா
விண்வெளியில் 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நாசாவின் ஸ்விஃப்ட் (Swift) விண்வெளித் தொலைநோக்கி (Space telescope) , தனது பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளது. இதனை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியும், பூமிக்கு கொண்டு வர நடந்த முயற்சியும் தோல்வியடைந்த நிலையில், நவம்பர் 4-ஆம் தேதி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து விழுந்துள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி, இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த காலத்தைவிட அதிகமாக, 22 ஆண்டுகள் விண்வெளியில் செயல்பட்டு சாதனை படைத்துள்ளது.
சுமார் 1,450 கிலோ எடை கொண்ட இந்தத் தொலைநோக்கி, இந்திய நேரப்படி நவம்பர் 4-ஆம் தேதி இரவு 6.09 மணியளவில் வடக்கு சுமத்ரா பகுதிக்கு மேலே பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியை நோக்கி வந்தபோது, தொலைநோக்கியின் பெரும்பாலான பாகங்கள் வளிமண்டலத்திலேயே எரிந்து அழிந்திருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. எஞ்சிய பாகங்கள் பூமியில் விழுந்து யாருக்காவது பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கணிக்கப்பட்டிருந்தது.
காமா கதிர் வெடிப்புகளை ஆய்வு செய்தது!
இந்தத் தொலைநோக்கியின் முக்கியப் பணியாக உலகில் ஏற்படும் மிக சக்திவாய்ந்த வெடிப்புகளான காமா கதிர் வெடிப்புகளை ஆய்வு செய்துக் கொண்டு இருந்தது. வெடிப்புகள் நிகழ்ந்த இடத்தைக் கண்டறிந்து, மற்ற தொலைநோக்கிகளுக்குத் தகவல் அனுப்பி, அதன் பின்னர் அந்தப் பகுதியை ஆய்வு செய்யும் திறன் இந்த தொலைநோக்கிக்கு இருந்தது.
இதுதவிர, சூப்பர்நோவா வெடிப்புகள், கருந்துளைகள், சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கள் குறித்தும் ஆய்வு செய்து அனுப்பியுள்ளது இந்த தொலைநோக்கி. 2018-ஆம் ஆண்டு, இதன் முதல் முதன்மை ஆய்வாளரான நீல் கெரல்ஸின் நினைவாக, இந்தத் தொலைநோக்கிக்கு 'நீல் கெரல்ஸ் ஸ்விஃப்ட் ஆய்வகம்' (Neil Gehrels Swift Observatory) எனப் பெயர் மாற்றப்பட்டது.
கடந்த அக்டோபர் 20-ஆம் தேதிதான் இந்தத் தொலைநோக்கி தனது கடைசி அறிவியல் ஆய்வை மேற்கொண்டது. மீண்டும் உயரமான சுற்றுப்பாதைக்கு எடுத்துச் சென்று அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்க மேற்கொள்ளப்பட்ட தனியார் விண்கலத்தின் மீட்பு முயற்சியும் தோல்வியடைந்ததால், தற்போது அதன் 22 ஆண்டுகால விண்வெளிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

