\
Laika the First Dog in Space aboard Sputnik 2
Model imagechat gpt

மனித விண்வெளிப் பயணத்துக்கு முதல் பாதை.. திரும்ப முடியாமல் அமைதியான ’லைகா’!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் வரலாற்று ஆய்வு முன்னெடுப்பில் மறக்க முடியாத பெயர் லைகா. 1957ஆம்ஆண்டு, நவம்பர் மாதம் சோவியத் யூனியன் ஏவிய 'ஸ்புட்னிக் 2' விண்கலத்தில், லைகா என்ற தெருநாய் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
Published on: 

விண்ணில் ஏவப்பட்டு பராமரிக்கப்படும் விண்வெளி மையத்துக்கு மனிதர்களை அனுப்பி தங்கவைத்து ஆய்வு செய்வது என அறிவியல் முன்னேற்றம் இப்போது அளப்பரியதாகிவிட்டது. விண்வெளிஆய்வில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்றான ரஷ்யா 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஸ்புட்னிக்1 செயற்கைக்கோளை ஏவியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த மாதம் ஸ்புட்னிக் 2 என்ற விண்கலத்தில் நாய் ஒன்றை அனுப்பியது. மாஸ்கோவில் தெருநாய் ஒன்றைப் பிடித்து அதற்கு பயிற்சிகள் கொடுத்து லைகா எனப் பெயரையும் ரஷ்ய விஞ்ஞானிகள் வைத்தனர். அமைதியான குணமும், குறுகிய ஒரு பகுதியில் நீண்டநேரம் இருக்கும் சகிப்புத்தன்மையும் கொண்டதாக லைகா இருந்தது. ஸ்புட்னிக் 2 விண்கலத்துடன் சென்ற லைகா புவி சுற்றுப்பாதையை அடைந்த முதல் உயிரி என்ற பெருமையைப் பெற்றது.

ஆனால், அப்போதைய காலகட்டத்தில் விண்கலத்தைப் பூமிக்கு பத்திரமாகத் திரும்பக் கொண்டுவரும் வசதி இல்லாததால், லைகாவின் இந்தப் பயணம் ஒருவழிப் பயணமாகவே அமைந்தது. விண்கலம் ஏவப்பட்டபோது, ராக்கெட்டின் அதிர்வால் லைகாவின் இதயத் துடிப்பு அதிகரித்தாலும், அது விண்வெளியில் சிறிது நேரம் உயிர்வாழ்ந்தது. ஈர்ப்பு விசையற்ற சூழல் மற்றும் கதிர்வீச்சுக்கு இடையிலும் உயிரினங்கள் வாழ முடியும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உண்மையை விண்வெளி ஆய்வு உலகுக்கு நிருபித்தது. லைகாவின் உயிர் தியாகம் விண்வெளி அறிவியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக உயிர்வினைக் கட்டுப்பாட்டுஅமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, யூரி ககாரின் முதல் மனிதனாக விண்வெளிக்குச் செல்லவும், நிலவில் மனிதன் கால் பதிக்கவும் அடித்தளம் அமைந்தது. விண்வெளி ஆய்வு முன்னெடுப்புக்காக உயிரிழந்த லைகா நாய், விண்வெளி வரலாற்றில் என்றென்றும் நீங்காத ஒரு சின்னமாக நினைவுகூரப்படுகிறது.