ஆப்கனில் மாற்றம்? | 45 வயது நபருக்கு 6 வயது சிறுமி திருமணம்.. தடுத்து நிறுத்திய தாலிபன்கள்!
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு, அங்கு பெண்களுக்கான சுதந்திரம் முழுவதுமாகப் பறிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021இல் அவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபிறகு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதிராகக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வயது வந்த பெண்கள் மேல்நிலைக் கல்வி பயில தடைவிதிக்கப்பட்டது. சிறுமிகளாக இருந்தாலும்கூட சிறுவர்களுடன் இணைந்து கல்வி பயில தடை எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தவிர, ஆடை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள், ஆண் மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், பொது இடங்களுக்கு ஆண் துணையின்றிச் செல்லக்கூடாது என்பதுடன் உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தெற்கு ஆப்கானிஸ்தானில் 45 வயது நபருக்கு, ஆறு வயது சிறுமியை மணமுடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஆப்கானிஸ்தானின் மர்ஜா மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மணமகன் என்று கூறப்படும் 45 வயது மதிக்கத்தக்க அந்த நபருக்கு ஏற்கெனெவே திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். இந்தச் சூழலில்தான் அவர், சிறுமியின் திருமணத்திற்காக அந்தக் குழந்தையின் தந்தைக்கும் பணம் கொடுத்து உதவியுள்ளார். அதன்பேரில், அந்தச் சிறுமியை அவரிடம் தந்தையே விற்றுள்ளார். இதையடுத்து, அந்தச் சிறுமியை அவர் கட்டாயம் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட தாலிபன்கள் அந்தச் சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனர். சிறுமிக்கு 9 வயதானதற்குப் பிறகு அவரை கணவர் வீட்டுக்கு அனுப்பலாம் எனத் தெரிவித்தனர். அதேநேரத்தில் சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாய் இருந்த மணமகனையும், சிறுமியின் தந்தையையும் கைது செய்தனர். இதுகுறித்து, உள்ளூர் தாலிபன் அதிகாரிகள் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. அதேபோல், முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனினும், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. பயனர்கள் பலரும் இதுகுறித்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் சிறுமிகளின் திருமண ஏற்பாடு வால்வாரின் வழக்கமான நடைமுறையை உள்ளடக்கியது. அங்கு பெண்ணின் உடல் தோற்றம், கல்வி மற்றும் உணரப்பட்ட மதிப்பின் அடிப்படையில் மணமகள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
2021இல் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் குழந்தை மற்றும் இளவயது திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இது ஏழைச் சிறுமிகள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள், குறிப்பாக பெண் கல்வி தடை ஆகியவற்றால் உந்தப்படுகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது எதுவும் இல்லை. பெண்களுக்கான குறைந்தபட்ச வயதாக 16 வயதை நிறுவிய முந்தைய சிவில் சட்டம் மீட்டெடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஐ.நா. பெண்கள் அறிக்கையின்படி, தாலிபன்கள் பெண்களின் கல்வி மீதான தடை, நாடு முழுவதும் குழந்தை திருமணங்களில் 25% அதிகரிப்புக்கும், ஆரம்பகால குழந்தைப் பேற்றில் 45% அதிகரிப்புக்கும் பங்களித்துள்ளது. இது ஏற்கெனவே ஆபத்தான சமூக-பொருளாதார நிலப்பரப்பில் இளம் பெண்களின் பாதிப்பை அதிகரிக்கிறது. குழந்தைத் திருமணம் பெண்களின் உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த குழுக்கள், முன்கூட்டிய திருமணங்களில் ஈடுபடும் பெண்கள் அடிக்கடி மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன, இதில் முன்கூட்டிய கர்ப்பங்கள் அதிகரித்த சுகாதார அபாயங்கள், அத்துடன் வீட்டு வன்முறை மற்றும் ஆழ்ந்த சமூக தனிமைப்படுத்தல் ஆகியவை அடங்கும்.