பெண்களின் பெயர்களுக்கு பிரச்னை? அடையாளத்தையே அழிக்கும் தலிபான்கள்!அதிர்ச்சியில் ஆப்கானிஸ்தான்!
செய்தியாளர் - ராஜ்குமார். ர
ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அடையாளமாக அவர்களது பெயரே கருதப்படுகிறது. ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்குத் தனிப்பட்ட அடையாளம் இருக்கக் கூடாது என்பதுபோல், அவர்களுக்குப் பெயர்களே தேவையில்லை என தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. அப்படி ஆப்கானிஸ்தானில் பெண்களின் பெயர்களை நீக்குவதற்கு என்ன காரணம்? பார்க்கலாம்...
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், அன்றிலிருந்து பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமான நடமாட்டம் மற்றும் பொது வாழ்க்கையில் பங்கேற்பது எனப் பல்வேறு விஷயங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, சிறுமிகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதற்கும், பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாகவே தற்போது பெண்களின் தனிப்பட்ட அடையாளத்தையும் பாதிக்கும் வகையிலான புதிய நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாணத்தில், பெண்களின் பெயர்களை அரசு ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துச் சீட்டுகள், மருத்துவப் பதிவுகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பதிவு செய்யக் கூடாது எனவும், அதற்குப் பதிலாக 'பிபி' என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சொல் பொதுவாகப் பெண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் மரியாதையான அழைப்புச் சொல்லாகும். அதேநேரத்தில், சில இடங்களில் பெண்கள் 'ஆடு', 'மாடு' போன்ற இழிவான சொற்களாலும் குறிப்பிடப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், பெண்களின் பெயர்களை மருத்துவப் பதிவுகளில் இருந்து நீக்குவது அவர்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே மாதிரியான பொதுவான பெயர்களில் பல பெண்களின் மருத்துவப் பதிவுகள் பராமரிக்கப்பட்டால், நோயாளிகளைத் தனித்தனியாக அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படலாம். இதனால், மருத்துவச் சிகிச்சை வழங்குவதிலும், மருந்துகளைச் சரியாக வழங்குவதிலும் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகப் பெண்கள் உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்த உத்தரவு தற்போது பால்க் மாகாணத்தில் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இவ்வாறு, பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை உரிமைகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் ஆப்கானிஸ்தானில், தற்போது அவர்களின் தனிப்பட்ட பெயர்களையும் அடையாளத்தையும் மறைக்கும் நடவடிக்கை குறித்த தகவல்கள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
