இணைப்பு குறித்த பேச்சு.. ஜின்பிங் கருத்துக்கு தைவான் அதிபர் பதில்!
சீன கடல் பகுதி அமைந்துள்ள ஒரு சிறு தீவே, தைவான். ஆனால், தைவானை தனி நாடு அல்ல என்றும், அது சீனாவின் ஒரு பகுதி என்றும் தொடர்ந்து சீனா சொல்லிவருகிறது. இதற்கு தைவான் அரசு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், தைவான் அதிபர் லாய் சிங் தேவ்-ஐ பிரிவினைவாதி என்றும், தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சீனா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. தவிர, தைவானை அச்சுறுத்தும் விதமாக போர்ப் பயிற்சியிலும் சீனா ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இதனால், பல ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே முட்டல் மோதல் நிலவி வருகிறது.
அந்த வகையில், கடந்த அக்டோபரில்கூட முப்படைகளை வைத்து, தைவானை கைப்பற்றுவது போன்று சீனா போர் ஒத்திகை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலளித்த தைவான், “சீனா தங்கள் எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளது. தாங்கள் சூழலை கண்காணித்து வருகிறோம். சூழலுக்கு ஏற்ப செயல்படுவோம்” எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துனர். அந்த வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்திருந்த வாழ்த்துச் செய்தியில், ”தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள சீனர்களான நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தைவானை சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” எனத் தெரிவித்திருந்தார். இது, அந்த நாட்டுக்கு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் ஜின்பிங்கின் கருத்துக்குப் பதிலளித்துள்ள தைவான் அதிபர் லாய் சிங்-தே, சீனாவுடன் சமமான மற்றும் சுமூகமான பரிமாற்றங்களை விரும்புவதாகவும், நல்லெண்ணத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய புத்தாண்டுச் செய்தியில், ”தைவானுக்கு வர சீன சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்களை அந்நாட்டு அரசு தடுக்கிறது. அதேநேரத்தில் தைவான் மக்கள் சீனாவுக்குச் செல்வதற்கு இதுபோன்ற தடைகள் எதுவும் இல்லை. ஆகையால், நாங்கள் எப்போதும்போல சீனாவுடன் பரஸ்பரமாக நடந்துகொள்ள விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் தைவானின் அதிபராகப் பதவியேற்ற லாய், சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். ஆனால், அதை சீனா நிராகரித்து குறிப்பிடத்தக்கது.