அபு முகமது அல்-ஜோலானி
அபு முகமது அல்-ஜோலானிஎக்ஸ் தளம்

உள்நாட்டுப் போர் | “சிரியா ஆட்சியைக் கவிழ்ப்பதே இலக்கு” - கிளர்ச்சியாளர்களின் தலைவர் சவால்!

“சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதே எங்களுடைய இலக்கு” என ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கிளர்ச்சிக் கூட்டணியின் தலைவர் அபு முகமது அல்-ஜோலானி தெரிவித்துள்ளார்.
Published on

சிரியாவில் உள்நாட்டுப் போர்

சிரியாவில் தற்போது உள்நாட்டுப் போர் தீவிரமெடுத்துள்ள நிலையில், அலெப்போ நகரை கிளர்ச்சி படை கைப்பற்றியுள்ளது. இது, அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். தலைநகா் டமாஸ்கஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்கள், பெரும்பாலான மாகாணங்கள் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக இருந்துவந்த நிலையில், அலெப்போ மாகாணத்தில் கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தி முன்னேறினா்.

முன்னேறும் கிளர்ச்சிப் படைகள்

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான இந்த எதிர்பாராத தாக்குதலால் தற்போது சிரியா ராணுவம் நிலைகுலைந்து பின்வாங்கியது. முன்னதாக, கடந்த 2016-ல் அலெப்போ நகரம் கிளர்ச்சிப் படைகள் வசம் இருந்தது. அப்போது, சிரியா அரசுக்கு ஆதரவாக உள்ள ரஷ்யா, அதிரடியாக வான் தாக்குதல் நடத்தி அந்த நகரத்தை மீட்டுக் கொடுத்தது. தற்போது அதே நகரத்தைக் கிளர்ச்சிப் படையினர் மீட்டுள்ளனர். இந்த நிலையில், நான்காவது நகரமான ஹமா நகரின் பாதுகாப்பு அரணும் தகா்க்கப்பட்டதால் அங்கிருந்தும் வெளியேறியதாக சிரியா ராணுவம் அறிவித்தது.

அதையடுத்து, அந்த நகரையும் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். இந்த நகரின் மத்திய சிறையில் இருந்த 3,000க்கும் மேற்பட்ட கைதிகளையும் கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்தனர். இவர்கள், ஆளும் அரசுக்கு எதிராகப் புரட்சி செய்ததாகச் சொல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து, அரசுப் படைகளின் வசம் உள்ள பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் கிளர்ச்சிப் படைகள் முன்னேறி வருகின்றன.

அபு முகமது அல்-ஜோலானி
மீண்டும் தொடங்கிய சிரியா யுத்தம்| ஓங்கும் கிளர்ச்சிப் படைகளின் கை.. என்ட்ரி கொடுத்த ரஷ்யா, ஈரான்!

“ஆட்சியைக் கவிழ்ப்பதே எங்களுடைய இலக்கு”

அந்த வகையில், அலெப்போவைத் தொடர்ந்து இத்லிப் நகரை குறிவைத்து கிளர்ச்சி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசு படைகளின் வசமுள்ள டமாஸ்கஸ் நகரையும் குறிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நாட்டின் மூன்றாவது நகரமான ஹோம்ஸ் நகரையும் கிளர்ச்சியாளர்கள் குறிவைத்துள்ளனர். இது அரசு படைகளுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதேநேரத்தில், சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்தின் அரசுக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் மற்றும் ஈரானின் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மற்றும் பிற போராளிக் குழுக்கள் ஆதவாகக் களமிறங்கியுள்ளன.

இந்த நிலையில், “அதிபர் பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதே எங்களுடைய இலக்கு” என ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கிளர்ச்சிக் கூட்டணியின் தலைவர் அபு முகமது அல்-ஜோலானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “அதிபர் பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதே எங்களுடைய இலக்கு. எங்களுடைய குறிக்கோள் மற்றும் புரட்சியின் இலக்கு அதுவே. அந்த இலக்கை அடைய கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது நமது உரிமை. சிரியாவில் 40 ஆண்டுகளாக நீடித்த காயத்தை சுத்தம் செய்யவே தனது போராளிகள் ஹமாவிற்குள் நுழைந்தனர்” என தெரிவித்துள்ளார்.

அபு முகமது அல்-ஜோலானி
சிரியா | ஆளும் அரசுக்கு எதிராக கடும் சண்டை.. ஹமா சிறையைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

அதிகளவில் இடம்பெயரும் மக்கள்

கடந்த வாரம் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரின் காரணமாக இதுவரை 826 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் போரால் இதுவரை 2,80,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் 1.5 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என அது எச்சரித்துள்ளது.

நவம்பர் 27 அன்று தொடங்கிய இந்த உள்நாட்டுப் போர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையில் வழிநடத்தப்படுகிறது. இது அல்-கொய்தா அமைப்பின் சிரியா கிளையில் வேரூன்றி உள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனான் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போரில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த அதேநாளில், கிளர்ச்சியாளர்கள் வடக்கு சிரியாவில் தங்கள் தாக்குதலைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு துருக்கியும் ஆதரவாக உள்ளது.

அபு முகமது அல்-ஜோலானி
'குண்டுமழை பொழியும் ஏவுகணைகள்'- லெபனான் சிரியா எல்லைத் துண்டிப்பு.. இஸ்ரேல் நடத்தும் கோரத் தாக்குதல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com