சரிந்த பனிப்பாறை... புதைந்த கிராமம்... சுவிட்சர்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சுவிட்சர்லாந்து நாட்டின் வாலேஸ் அருகே பனிமலை சிகரங்கள் பல அமைந்துள்ளன. அப்படி பனிமலைகளின் மடியில் அமைந்துள்ளது BLATTEN என்ற அழகான கிராமம்,
இந்த சிகரத்தின் உச்சியில் ராட்சத பனிப்பாறை ஒன்று வெகு நாட்களாக தொடர்ந்து உருகி வருகின்றது. இந்த நிலையில் நேற்று அந்த ராட்சத பனிப்பாறை பயங்கர சத்தத்துடன் மலை வழியாக வேகமாக சரிந்தது.தொடர்ந்து அந்த பனிப்பாறை முழுவதுமாக சரிந்து அடிவாரத்திற்கு வந்தது. இதன் காரணமாக மலை அடிவாரத்தில் இருந்த ஆல்பைன் என்ற கிராமம் பனிப்பாறைகள் மற்றும் பனி குவியல்களால் முழுவதுமாக மூடியது.
இது சுவிட்சர்லாந்தில் பதிவான மிகப்பெரிய பனிச்சரிவுகளில் ஒன்றாகும். இதனால் 90% கிராமம் அழிந்து போனது. பனிப்பாறையின் நிலைமாற்றத்தை உணர்ந்து முன்னதாகவே அங்கு வசிக்கும் 300க்கும் மேற்பட்ட மக்களையும் மாடுகளையும் அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றியிருந்தனர்.
இதனால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இடிபாடுகளில் 64 வயது நபர் காணாமல் போனார்.
அந்த கோர நிகழ்வின்போது, 3.1 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உருவானது. பனிப்பாறையின் அடிப்பகுதி உருகியது மற்றும் பாறைகளின் சிதைவால் இப்படி நிகழ்ந்திருக்கலாம் என்றும், இது பருவநிலை மாற்றத்தின் விளைவாக நடந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர் "உங்கள் வீட்டை இழப்பது மிகவும் மோசமானது" என்று தனது X தளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆறுதல்களைத் தெரிவித்திருக்கின்றார். 2023 ஆம் ஆண்டில், கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பிரையன்ஸ் கிராமத்தில் நடந்த பனிப்பாறை சரிவின் பின் நிகழ்ந்த பெரும் பனிப்பாறைச் சரிவாக இது மதிப்பிடப்படுகிறது