தென் கொரியா | மீண்டும் தற்காலிக அதிபராக ஹான் டக் சூ நியமனம்!
தென் கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன. டிசம்பர் 14ஆம் தேதி இதற்கான வாக்குப்பதிவு தோல்வியில் முடிந்தாலும், 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இயோல் தகுதிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக இருந்த ஹான் டக் சூ தற்காலிக அதிபராகச் செயல்பட்டுவந்தார். பின்னர், அவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், துணை பிரதமராக இருந்த சோய் சாங் மோக் அந்தப் பொறுப்பை வகித்தார்.
இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம், ஹான் டக் சூ மீதான தகுதிநீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது எனக்கூறி, அதை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, நாட்டின் தற்காலிக அதிபராக ஹான் டக் சூ மீண்டும் நியமிக்கப்பட்டார்.