\
South korea
South korea reuters

அமெரிக்கா அழைப்பு.. ஹார்முஸை நெருங்கும் தென் கொரியா.. ஈரான் போரில் களமிறங்குகிறதா?

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தென்கொரியா உதவ வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈரான் - அமெரிக்கா மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஹார்முஸ் நீரிணைக்கு அருகே தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது. இதற்காக கூடுதல் வீரர்கள், கடல்சார் கண்காணிப்பு விமானம் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் உபகரணங்களை அனுப்ப அந்நாடு தயாராகி வருகிறது. இதனால், தென்கொரியாவும் ஈரான் போரில் மறைமுகமாகப் பங்கேற்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சோமாலியா கடற்கரைக்கு அருகே வணிகக் கப்பல்களைப் பாதுகாக்கவும், கடற்கொள்ளையர்களைத் தடுக்கவும் தென்கொரியா கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 'சோஹே' என்ற கடற்படைப் பிரிவைச் செயல்படுத்தி வருகிறது. இந்தப் படையின் செயல்பாடுகளை அரபிக்கடல் பகுதி வரை விரிவுபடுத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது.

South korea
South korea reuters

இதன் ஒரு பகுதியாக, பி-8ஏ ரக கடல்சார் கண்காணிப்பு விமானம், கண்ணிவெடிகளை அகற்றும் உபகரணங்கள் மற்றும் கூடுதலாக 75 ராணுவ வீரர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து சுமார் 650 கி.மீ. தொலைவில் உள்ள கடல் பகுதிகளில் தென்கொரியாவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த நடவடிக்கை ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்க அல்ல என்று தென்கொரியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தங்களது நாட்டு மக்களையும், வணிகக் கப்பல்களையும் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், தென்கொரியாவின் கடற்படைப் பிரிவு செயல்படும் பகுதிகள் ஈரானின் நேரடி கண்காணிப்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவும், தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க ஈரான் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Lee Jae Myung & Trump
Lee Jae Myung & Trump Reuters

அதேநேரத்தில், ஹார்முஸ் நீரிணைக்குள் தென்கொரியப் படைகளை நேரடியாக அனுப்ப வேண்டுமானால், அதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் தனி ஒப்புதல் தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தென்கொரியா உதவ வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாகவே தென்கொரியா தனது கடற்படை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஈரான் தனது வான்வெளியில் பறந்த இரண்டு அமெரிக்க ஆளில்லா ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது. நவம்பர் 3-ஆம் தேதி ஹார்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க ராணுவம் இதுகுறித்து உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

South korea
மனித விண்வெளிப் பயணத்துக்கு முதல் பாதை.. திரும்ப முடியாமல் அமைதியான ’லைகா’!