சமூக ஊடக மோகம் | 'Doom Spending' வலையில் சிக்கும் இளம் தலைமுறை!
உண்மையிலேயே மகிழ்ச்சியாக வாழ்வதைவிட, மகிழ்ச்சியாக வாழ்வதாக மற்றவர்களுக்கு காட்டிக்கொள்வதே இளைஞர்கள் பலரின் பெரும் கவலையாக மாறியிருக்கிறது என்கின்றனர் உளவியலாளர்கள். எதிர்காலம் பற்றிக் கவலைப்படாமல், சமூக ஊடகங்களில் 'Trend' ஆகக் காட்டிக்கொள்ள மட்டுமே பணத்தை வாரி இறைக்கும் ஆபத்தான மனநிலையை உளவியலாளர்கள் 'டூம் ஸ்பென்டிங்' (Doom Spending) என்கிறார்கள்.
மற்றவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கும்போது நாம் விடுபட்டு விடுவோமோ? அதாவது Fear Of Missing Out என்ற உளவியலே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இது பலரை மன அழுத்தத்திலும் தள்ளிவிடுகிறது என்கிறது இந்தியன் சைக்யாட்ரிக் சொசைட்டி. யதார்த்த உலகிலிருந்து மாய உலகுக்கு இளம் தலைமுறையை இழுத்துச்செல்வதில் சமூக ஊடகங்களின் பங்கே பிரதானம் என்கின்றனர் உளவியலாளர்கள்.
இந்தியாவில் பிணையற்ற தனிநபர் கடன்களின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆண்டுக்கு 20%க்கும் மேல் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புதிய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. செயலிகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்கள், சுற்றுலாக்களுக்காக வாங்கும் கடன்கள் கணிசமாக அதிகரித்துள்ளன என CIBIL மற்றும் Experian கடன் தகுதி மதிப்பீட்டு நிறுவனங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இப்படி கடன் வாங்குபவர்களில் பலர் மாத தவணையை சரிவர செலுத்தாமல் சிபில் மதிப்பெண்கள் குறைந்து எதிர்காலத்தில் வீட்டுக்கடன், தொழிற்கடன் போன்றவை பெற முடியாத பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்சினையிலிருந்து விடுபட வாழ்க்கையில் இலக்குவைத்து இயங்குவது அவசியம் என்றும் உளவியலாளர்கள் கூறுகின்றனர். டிஜிட்டல் உலகின் மாய வலைகளில் சிக்காமல் நமக்கு எது தேவையோ அதுவே அழகு என்ற முதிர்ச்சியோடு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே இன்றைய அவசரயுகத்தில் நாம் தேடவேண்டிய உண்மையான நிம்மதியும், நாம் அடைய வேண்டிய ஆகச்சிறந்த சுதந்திரமும் ஆகும்.

