ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு | ”வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும்” - சிங்கப்பூர் பிரதமர் கவலை!
அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். இதன்படி இந்தியப் பொருள்களுக்கும் 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தவிர சீனா, கம்போடியா, வியட்நாம், மியான்மர், இலங்கை, வங்கதேசம், செர்பியா, தாய்லாந்து, சீனா, தைவான், பாகிஸ்தான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு 10% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயமும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தவிர, எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர். இதற்கிடையே, ட்ரம்பின் வரிவிதிப்பால் ஆசிய அளவில் பங்குச்சந்தைகளில் இதன் தாக்கம எதிரொலித்தது. அந்தவகையில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதே வேளையில் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி-யும் கடும் இறக்கத்தை எதிர்கொண்டுள்ளது. வாரத்தின் முதல் நாளே பெரும்பாலான இந்திய பங்குகள் சரிவுடன் வர்த்தகமான நிலையில், பங்குச்சந்தைகளின் சரிவால் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு 16 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேபோல கச்சா எண்ணெய்யின் விலையும் சரிவைச் சந்தித்திருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளை அழித்துவிடும் என்று அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வாங் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் வீடியோ மூலம் எடுத்துரைத்த சிங்கப்பூர் பிரதமர், ”டொனால்டு ட்ரம்பின் செயல்கள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கை வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும். உலகமயமாக்கலின் புதிய அபாயத்திற்குள் செல்கிறோம். அமெரிக்காவைப்போல ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டின் மீது வரிகளை அதிகப்படுத்தத் தொடங்கினால், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் அழிந்துவிடும்” என கவலை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, 50க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்பை தொடர்பு கொண்டிருப்பதாக அமெரிக்காவின் தேசிய பொருளாதார கூட்டமைப்பின் இயக்குநர் கெவின் ஹசெட் தெரிவித்துள்ளார்.