வரிவிதிப்பு | ”சிலநேரங்களில் மருந்து சாப்பிட்டே ஆகணும்” - ட்ரம்ப் விளக்கம்!
அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். இதன்படி இந்தியப் பொருள்களுக்கும் 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தவிர சீனா, கம்போடியா, வியட்நாம், மியான்மர், இலங்கை, வங்கதேசம், செர்பியா, தாய்லாந்து, சீனா, தைவான், பாகிஸ்தான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு 10% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்த வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயமும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வார தொடக்க நாளான இன்று, உலக பங்குச் சந்தையும் சரிவைக் கண்டுள்ளது. இந்த நிலையில், ”அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட கூர்மையான சரிவுகள், தனது வர்த்தக வரிகள் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுகின்றன” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட கூர்மையான சரிவுகள், தனது வர்த்தக வரிகள் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுகின்றன. உலக நாடுகளால் நாங்கள் மிக மோசமாக நடத்தப்பட்டோம். முன்பிருந்த முட்டாள்தனமான தலைமை அதை அனுமதித்தது. ஆனால் நாங்கள் அதைச் சரி செய்கிறோம். சில நேரங்களில் எதையாவது சரிசெய்ய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் நமக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி, வரி விதிப்புகள் மட்டுமே. இவை இப்போது அமெரிக்காவிற்கு பல பில்லியன் டாலர்களைக் கொண்டு வருகின்றன. அவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. அமெரிக்காவிற்கான வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள். மேலும் வர்த்தக பங்காளிகள் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.்