சீனாவுடன் கைகோர்த்த முய்சு! இந்தியா - மாலத்தீவு விரிசலின் பின்னணியில் இவ்வளவு அரசியல் இருக்கிறதா?

இந்தியா - மாலத்தீவு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதில் இருக்கும் பின்னணி குறித்து இக்கட்டுரையில் அறியலாம்.
முய்சு, மோடி, ஜின்பிங்
முய்சு, மோடி, ஜின்பிங்ட்விட்டர்

பிரதமர் மோடியை விமர்சித்த மாலத்தீவு அமைச்சர்கள்!

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தையும், இந்தியர்களையும் குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப், மஜ்ஜூம் மஜித் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதேபோன்று ஆளும் பிபிஎம் கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் தெரிவித்திருந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு சஸ்பெண்ட் செய்தது. அத்துடன், இது அவர்களின் தனிப்பட்ட கருத்து எனவும், இதில் மாலத்தீவு அரசுக்கும் சம்பந்தமில்லை எனவும் விளக்கம் அளித்தது. எனினும், பிரதமர் மோடி தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்திருந்த நிலையில், அந்நாட்டு தூதர் இப்ராகிம் ஷாகீப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி இருந்தது.

இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய இருநாடுகளுக்கிடையே இவ்விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ள நிலையில், மாலத்தீவின் புதிய அதிபர் முகம்மது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முய்சுவுக்கு முன், மாலத்தீவு அதிபர் யாராக இருந்தாலும் பதவியேற்றதும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவதே வாடிக்கையாக இருந்தது. ஆனால், இந்த விஷயத்தில் முய்சு முரண்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்குக் காரணம், முகமது முய்சுவின் மாலத்தீவு முற்போக்கு கட்சியில் சீனாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்தியாவிற்கும் மாலத்தீவிற்குமான நெருங்கிய உறவு

சீனாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு 1972ஆம் ஆண்டு தொடங்கியது என்றாலும், இந்தியாவுக்கும் மாலத்தீவுக்குமான உறவு 1965லேயே தொடங்கியது. அந்த வகையில் பார்க்கப்போனால், மாலத்தீவுடன் அதிகாரப்பூர்வ உறவை மேற்கொண்ட முதல் நாடு இந்தியாதான். எனினும், அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் மாலத்தீவு ஆட்சியாளர்கள் இரு நாடுகளின் பக்கமும் சாய்ந்தபடி வந்துள்ளனர். 1988ஆம் ஆண்டு, மௌமூன் அப்துல் கயூமின் அரசைக் காப்பாற்றுவதற்காக, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ராணுவத்தை அனுப்பி, அந்நாட்டுக்கு பாதுகாப்பு அளித்தார்.

அதைத் தொடர்ந்து தற்போதைய பிரதமர் மோடியும் மாலத்தீவுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார். அந்த நாடு, கடந்த 2018ஆம் ஆண்டு குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டபோது, ​​இந்தியாவிலிருந்து தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது. தவிர, பொருளாதார நெருக்கடியில சிக்கித் தவித்த மாலத்தீவை மீட்பதற்காக பலமுறை இந்திய அரசு கடன் கொடுத்து காப்பாற்றியுள்ளது. மேலும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள், ராணுவத் தளவாடங்களையும் இந்தியா வழங்கியுள்ளது. இதுபோக, மாலத்தீவு கடற்படைக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்கவும் இந்தியா உதவி வருகிறது. இப்படி, இந்தியா - மாலத்தீவு உறவுகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் நிலையில், தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பதற்கு சீனாதான் காரணம் என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

மாலத்தீவில் ஆதிக்கம்: சீனாவின் சித்து விளையாட்டுகள்!

அதாவது, மாலத்தீவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவே சீனா இத்தகைய சித்து விளையாட்டுகளை ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவைப்போன்று சீனாவும் மாலத்தீவின் வளர்ச்சியில் பலமுறை பங்கெடுத்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில், மாலத்தீவுக்கு சீனா 16 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியது. 2017இல், மாலத்தீவு சீனாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும் மாலத்தீவு சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் இணைந்தது. இதன் காரணமாகவே இந்தியா - மாலத்தீவு உறவில் விரிசல் விழுந்திருப்பதாகவும், சமீபத்தில் (30 செப்டம்பர் 2023) நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற முய்சு சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

இதற்கு உதாரணமாய், முன்னதாக அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ​​அவரது கட்சி 'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்தை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் வெற்றிபெற்றவுடன், துபாயில் பிரதமர் மோடியைச் சந்தித்தபின் பேசிய முய்சு, மாலத்தீவு மக்களின் விருப்பத்தை வரவேற்பதாகவும், தங்கள் வீரர்களை இந்தியாவுக்கு திரும்ப அழைப்பதாக இந்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். முன்னதாக, 2023, நவம்பர் 17ஆம் தேதி, மாலத்தீவில் இருந்து இந்தியப் படைகளை அகற்றுவது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் முய்சு பேசியிருந்தார்.

மாலத்தீவு சீனாவுடன் நெருக்கம் காட்டுவது ஏன்?

அதேநேரத்தில், முய்சு மற்றும் அவரது தலைமையிலான கூட்டணி மாலத்தீவில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடன்கள் மற்றும் மானியங்கள் வடிவில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கும் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. முய்சுவே, மாலத்தீவில் சீன உள்கட்டமைப்புத் திட்டங்களை பற்றி வெளிப்படையாகப் பாராட்டிப் பேசியிருந்தார். தவிர, இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் மாலத்தீவை விட்டுவெளியேற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அத்துடன், இந்தியாவுக்கு எதிராக சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தையும் ஆதரித்து வருகிறார். மேலும் சமீப ஆண்டுகளில் மாலத்தீவு இந்தியாவுடன் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்ய விரும்புவதாகவும் முய்சு கூறி வருகிறார். இது எல்லாமே சீனாவின் நடவடிக்கைகள்தான் என்று சொல்லப்படுகிறது.

முய்சுவின் தலைமையிலான மாலத்தீவு அரசு முற்றிலும் சீனாவிற்கு நெருக்கமாக மாறினால், அது இந்தியாவிற்குப் பெரிதும் பின்னடைவாக மாறும் எனக் கூறப்படுகிறது. இதனால், இந்தியா - சீனா இடையே பதற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சீனா, இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுடன் நெருக்கம் காட்டிவருகிறது. அதிகமான கடன் கொடுத்து, தன் வலையில் நாடுகளை வைத்துக்கொள்ள விரும்புகிறது. மீளவே முடியாத அளவிற்கு ஒவ்வொரு நாடுகளுக்கும் கடன் கொடுக்கும் சீனா, அங்கு தனது வர்த்தகம், ராணுவம், கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்தான் தற்போது மாலத்தீவுடன் உறவை மேம்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. வியூகரீதியாக அதன் புவியியல் இருப்பிடத்தை அறிந்தே, சீனா, மாலத்தீவில் ஆதிக்கம் காட்டுவதாக ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர்.

’இந்தியாவைப் புறக்கணிக்குமாறு மாலத்தீவிடம் சீனா கூறவில்லை’

எனினும், ’இந்தியாவைப் புறக்கணிக்குமாறு மாலத்தீவிடம் சீனா கூறவில்லை’ என்று அந்நாட்டு அரசு பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அந்தச் செய்தியில், ’மாலத்தீவை சமமான பங்குதாரராக சீனா கருதுகிறது. மாலத்தீவின் இறையாண்மையை மதிக்கிறது. அதேபோல், மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்பு மற்றும் கூட்டுறவை சீனா மதிக்கிறது. இந்தியாவுடன் நல்லுறவுடன் இருப்பது மாலத்தீவுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சீனா அறிந்திருக்கிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு நிலவுவதால், இந்தியாவை புறக்கணிக்குமாறு சீனா மாலத்தீவை ஒருபோதும் கேட்கவில்லை. அதுமட்டுமல்ல சீனா, இந்தியா, மாலத்தீவு இடையே முத்தரப்பு ஒத்துழைப்பு நிலவ வேண்டும் என்றும் சீனா விரும்புகிறது’ என அதில் தெரிவித்திருப்பதுடன், ’மாலத்தீவின் புதிய அதிபராக முகம்மது முய்சு தேர்வானதில் இருந்து மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு ஆரோக்கியமாக இல்லை’ எனவும் அது தெரிவித்துள்ளது.

மாலத்தீவு எங்கு அமைந்துள்ளது?

இந்தியாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது, மாலத்தீவு. இந்திய நகரமான கொச்சியில் இருந்து மாலத்தீவு, சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது 1,200 தீவுகளைக் கொண்டது. பெரும்பாலான தீவுகள் மக்கள் வசிக்காதவை. மாலத்தீவின் பரப்பளவு 300 சதுர கிலோமீட்டர். அதாவது, டெல்லியைவிட இது 5 மடங்கு சிறியது. மாலத்தீவின் மக்கள்தொகை சுமார் 4 லட்சம். மாலத்தீவு, 1965இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம்பெற்று, நவம்பர் 1968இல் குடியரசாக மாறியது. மாலத்தீவின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத் துறையை நம்பியே உள்ளது. மாலத்தீவுக்கு அதிகம் சுற்றுலா செல்பவர்களில் இந்தியர்களே முதல் இடத்தில் உள்ளனர். 2021இல் மூன்று லட்சம் பேரும், 2022இல் இரண்டரை லட்சம் பேரும், 2 லட்சம் பேரும் சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com