குரங்குகளுக்கு தட்டுப்பாடு.. பெரும் சிக்கலில் அமெரிக்கா.. சீனாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கால் அதிர்ச்சி!
மனிதர்களின் உயிரியல் அமைப்போடு சில வகை குரங்குகள் நெருங்கிய ஒற்றுமை கொண்டிருப்பதால், புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள் குறித்து மனிதர்களிடம் சோதனை நடத்தும் முன்னர் குரங்குகள் மூலம் பரிசோதனை செய்வது உலகளவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள் துறையில் அமெரிக்கா பல கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதனால் இந்த பரிசோதனைகளுக்காக அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 20,000 குரங்குகளை பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சீனாவில் இருந்து அதிக அளவில் குரங்குகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.
2020-க்கு முன் அமெரிக்காவிற்குத் தேவையான ஆய்வகக் குரங்குகளில் 60% சீனாதான் வழங்கி வந்தது. ஆனால் அமெரிக்கா சீனாவுக்கு முக்கிய சிப் ஏற்றுமதிக்கு தடைவிதித்ததால் 2020-இல் சீனா அமெரிக்காவுக்கு குரங்குகள் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
எனினும், சில ஆண்டு ஆய்வுகளுக்கான குரங்குகள் அமெரிக்காவின் கைவசம் இருந்ததால் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் தற்போது ஆய்வக குரங்குகளுக்கு அமெரிக்காவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அந்நாட்டின் மருத்துவ ஆய்வுத்துறையையே முடக்கியுள்ளது.
AI எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் மூலம் புதிய மருந்து மூலக்கூறுகளை ஆய்வாளர்கள் மிக வேகமாகக் கண்டறிகின்றனர். இதனால் சோதிக்கப்பட வேண்டிய புதிய மருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து, குரங்குகளுக்கான தேவையும் பல மடங்கு உயர்ந்துள்ளதே இந்த தட்டுப்பாடுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நெருக்கடியைத் தீர்க்க, Palantir என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜோ லோன்ஸ்டேல் (Joe Lonsdale) நிதியுதவியுடன் Safer Human Medicine என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இந்த நிறுவனம் 20 மில்லியன் அமெரிக்கா டாலர் முதலீட்டில், அமெரிக்காவிலேயே 20 ஆண்டுகளில் சுமார் 30,000 குரங்குகளை வளர்க்கும் பிரம்மாண்ட பண்ணை மற்றும் இனப்பெருக்க மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, அமெரிக்க ஆய்வகங்களுக்கான குரங்குத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

