தோல்வியை தழுவிய ட்ரம்ப் கட்சி| மாபெரும் வெற்றிபெற்ற எதிர்க்கட்சி.. அமெரிக்க தேர்தலில் அதிரடி மாற்றம்
அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றும் செனட் சபைக்கும் (Senate) மாகாண ஆளுநர் பதவிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. நேற்று இரவு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், உடனடியாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
இதில் செனட் சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கு நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் தற்போது வரை செனட் சபையில் பெரும்பான்மைக்கு தேவையான 51 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னர் செனட் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு 45 இடங்களும், குடியரசுக் கட்சிக்கு 48 இடங்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியாகும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையும் தற்போது உள்ளது. அதே நேரம், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி இந்த இடைத்தேர்தலில் தற்போதுவரை 6 இடங்களை இழந்துள்ளது.
மேலும் நாடாளுமன்றத்தின் மற்றொரு அவையான பிரதிநிதிகள் சபையிலும் தற்போது வரை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 175 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில் அதை விட அதிக தொகுதிகளில் ஜனநாயகக் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், பிரதிநிதிகள் சபையும் ஜனநாயக கட்சியின் வசமாகியுள்ளது. பிரதிநிதிகள் சபையில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி 106 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சட்டங்களுக்கு தடை விதிக்கவும், அவரது அரசின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் மீது விசாரணைகளை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இனி ட்ரம்ப் அரசாங்கத்தால் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

