\
Elephants in Sri Lanka
Elephants in Sri Lanka reuters

உடலில் 75கி ஈயம்.. பல கிலோ குண்டுகள்.. இலங்கை காட்டு யானைகளுக்கு நடப்பது என்ன?

சில ஆண்டுகளுக்கு முன் மனிதர்களின் துப்பாக்கி பாதிக்கப்பட்ட காட்டு யானைகளின் உடல்களில் அதிகளவில் துப்பாக்கிக் குண்டுகளும், துப்பாக்கி குண்டுகளில் இருந்து வந்த ஈயமும் இருப்பது வனவிலங்கு ஆர்வலர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

காட்டு யானைகள் மற்றும் தந்தங்களைக் கொண்ட ஆண் யானைகளைப் பாதுகாக்கவும், மனிதர்கள் - யானைகள் இடையிலான மோதலைக் குறைக்கவும் உலகம் முழுவதிலுமே பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இதற்கு முன் மனிதர்களால் பாதிக்கப்பட்ட காட்டு யானைகளைபாதிப்பில் இருந்து மீட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதெப்படி என்பதில்தான் உண்மையான சிக்கலே இருக்கிறது.

அதற்கொரு உதாரணம்தான் இலங்கையில் தற்போது காட்டு யானைகள் அனுபவிக்கும் இன்னல்கள். சில ஆண்டுகளுக்கு முன் மனிதர்களின் துப்பாக்கி பாதிக்கப்பட்ட காட்டு யானைகளின் உடல்களில் அதிகளவில் துப்பாக்கிக் குண்டுகளும், துப்பாக்கி குண்டுகளில் இருந்து வந்த ஈயமும் இருப்பது வனவிலங்கு ஆர்வலர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

உதாரணத்திற்கு இலங்கையின் புகழ்பெற்ற காட்டு யானையான அக்போவின் உடலில் சுமார் 75 கிலோ தோட்டாக்களில் இருந்து வந்த ஈயம் (Lead) இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், பார்வையற்ற கல்கமுவா யானையின் உடலிலும் 25 கிலோவுக்கும் அதிகமான ஈயம் சிக்கியுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும், யானை வேட்டையாடப்படுவது மற்றும் வனப்பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த அடுத்தடுத்து வந்த அரசுகளும் வனவிலங்கு அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ரண்வெல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

Elephants in Sri Lanka
Elephants in Sri Lanka reuters

யானைகளை சுடுவதற்கு உள்ளூரில் தயாரிக்கப்படும் 'கல் கட்டா' என்ற துப்பாக்கிகள் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதில் இரும்பு உருண்டைகள், உலோகக் கழிவுகள் போன்றவற்றை குண்டுகளாகப் பயன்படுத்துகின்றனர். அவை யானைகளின் உடலுக்குள் சிதறி, ஆழமான காயங்களை ஏற்படுத்துகின்றன. துப்பாக்கிக் குண்டுகளின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்கும் யானைகள் பல ஆண்டுகளாக அந்த பாதிப்புளை சுமந்து திரிவதாக வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

யானைகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ‘ஹக்கா படாஸ்’ (Hakka Patas) எனப்படும் தாடையை உடைக்கும் வெடிகுண்டுகள், மற்றும் சட்டவிரோதத் துப்பாக்கிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடவும் இலங்கை அரசு திட்டமிட்டு இருக்கிறது.

காயங்கள் ஆறினாலும், உடலுக்குள் இருக்கும் உலோகத் துண்டுகளால் தொடர்ந்து வலி, தொற்று, வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில யானைகளால் நடக்கக்கூட முடியாத நிலை உருவாகிறது. முக்கிய உறுப்புகளுக்கு அருகில் சிக்கியுள்ள உலோகத் துண்டுகளை அகற்றுவதும் கடினம்.

இலங்கை வனவிலங்கு பாதுகாப்புத் துறை தகவலின்படி, 2026 ஜனவரி 1 முதல் அக்டோபர் 23 வரை 289 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் 42 யானைகள் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்துள்ளன. கடந்த 2010 முதல் 2026 அக்டோபர் 23 வரை மொத்தம் 5,397 யானைகள் உயிரிழந்துள்ளன.

Elephants in Sri Lanka
Elephants in Sri Lanka reuters

இதற்கிடையே, அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் 17 யானைகளைப் பாதுகாக்க 'ஹஸ்தி சேனா' என்ற புதிய பாதுகாப்புத் திட்டத்தை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. ஆபத்தான பகுதிகளில் தனியாகச் செல்லும் தந்தங்களைக் கொண்ட ஆண் யானைகளையும், யானைக் கூட்டங்களையும் கண்காணித்து, அவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிறப்புப் பயிற்சி பெற்ற ராணுவப் பாதுகாப்புக் குழுக்களைப் பணியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டு வருகிறது.

யானைகள் சுடப்படுவதற்கு முக்கிய காரணம் காடுகளை அழிப்பதே என்றும் உள்ளூர் தரப்பினர் தெரிவிக்கின்றனர். யானைகள் – மனிதர்கள் இடையிலான மோதல்களால் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான யானைகள் உயிரிழக்கும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. அதேபோல், இதுபோன்ற மோதல்களால் மனிதர்கள் உயிரிழப்பதில் உலக அளவில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. பொதுவாக, உணவு தேடி விளைநிலங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளால் இந்த மோதல்கள் ஏற்படுகின்றன.

Elephants in Sri Lanka
Elephants in Sri Lanka reuters

பெரும்பாலான நேரங்களில் யானைகளைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தை விட, தங்களின் நிலங்களை விட்டு அவற்றை அச்சுறுத்தி விரட்ட வேண்டும் என்ற எண்ணத்திலேயே மக்கள் சுடுகிறார்கள் என்றும் அந்தத் தோட்டாக்கள் யானைகளின் உடலுக்குள் ஆழமாகப் பதிந்து, பல வருடங்கள் தீராத வேதனையையும், இறுதியில் மரணத்தையும் கொடுக்கின்றன என்றும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மிகக் குறைந்த அளவில் இருந்தாலும், தந்தங்களுக்காக ஆண் யானைகளை வேட்டையாடும் கும்பல்களும், வால் முடி, தோல் போன்றவற்றை மூடநம்பிக்கை சார்ந்த சடங்குகளுக்காகவும், கறுப்புச் சந்தைக்காகவும் குறிவைக்கும் வேட்டைக்காரர்களும் யானைகளைச் சுடுகின்றனர்.

Elephants in Sri Lanka
ரீல்ஸ் வெறியால் பறிபோன உயிர் : பணியாளரை கொடூரமாக தாக்கிய புலி.. உண்மையை மறைக்க நடந்த நாடகம்!