ரீல்ஸ் வெறியால் பறிபோன உயிர் : பணியாளரை கொடூரமாக தாக்கிய புலி.. உண்மையை மறைக்க நடந்த நாடகம்!
பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் நார்மன் (Norman) என்பவருக்கு புலியின் அருகில் வீடியோ எடுத்தால் அது இன்னும் அதிக பார்வையாளரை பெற்றுத்தரும் என்ற யோசனை பிறந்துள்ளது. எனவே புலியுடன் வீடியோ எடுக்க பாகிஸ்தானின் லாகூர் (Lahore) அருகே உள்ள கஹ்னா (Kahna) பகுதியில் பண்ணை ஒன்றில் புலியை வளர்ந்துவரும் பண்ணை உரிமையாளர் ஃபயாஸ் (Fayyaz) என்பவரை தொடர்புகொண்டுள்ளார்.
இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் புலியை வைத்து டிக்டாக் வீடியோ எடுப்பதற்கு ஃபயாஸ் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி பண்ணைக்கு வந்த நார்மன் வீடியோ எடுப்பதற்காகப் புலியை அதன் கூண்டிலிருந்து வெளியே விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து கூண்டில் இருந்து வெளியேவந்த பெண் புலி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த பண்ணை ஊழியர் தல்ஹா என்பவரை மிகக் கொடூரமாகத் தாக்கியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தல்ஹாவை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் வெளிவந்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்பதால் நாய் தாக்கியதால் பண்ணை ஊழியர் தல்ஹா உயிரிழந்ததாக பண்ணை உரிமையாளர் ஃபயாஸ் மற்றும் டிக்டாக் பிரபலம் நார்மன் ஆகியோர் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.
ஆனால் மருத்துவர்களின் தகவல் மற்றும் பண்ணையில் வேலை செய்தவர்கள் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றின் மூலம் உண்மையை அறிந்துகொண்ட காவல்துறையினர் பண்ணை உரிமையாளர் ஃபயாஸ் மற்றும் டிக்டாக் பிரபலம் நார்மன் ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து பண்ணையில் இருந்த பெண் புலி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பண்ணையில் புலியை வளர்ப்பதற்கான முறையான உரிமம் உள்ளதா? மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. டிக்டாக்கில் ரீலிஸ் எடுப்பதற்காக ஒரு உயிர் பலியாகியுள்ளது பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

