நாளை சுதந்திர தினம்! இன்று பாகிஸ்தான் எச்சரிக்கை! நடந்தது என்ன?
செய்தியாளர் - கார்த்திகேயன்
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதற்கான பாதுகாப்பு பணிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளனர். இப்படியான சூழலில், பாகிஸ்தானின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது, ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், சுற்றுலா பயணிகள் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்து, பதிலடி தந்தது. எல்லையோரப் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதை முழுமையாக நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் என்பதில் இந்தியாவும் உறுதியாக உள்ளது.
இவ்வாறு இந்த நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைத்திருப்பதால், அந்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற யத்கர் - இ- பதே நினைவுச் சின்ன திறப்பு விழாவில், அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு, பாகிஸ்தானின் நீர் விநோயாகம் பாதிக்கப்பட்டால், பாகிஸ்தான் நேரடியான பதிலடியை கொடுக்கும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார். மேலும், சிந்து நதியின் ஒவ்வொரு நீர்துளியும் எங்களின் சிவப்பு கோடு என்றும் தனது எச்சரிக்கையை பதிவு செய்துள்ள அவர், நீர் விவகாரத்தில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளப்படாது என்றும் தெரிவித்தார்.
அமைதியைக் விரும்புபவர்கள் பலவீனமானவர்கள் அல்ல: பாகிஸ்தான் போரை விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறது. ஆனால், எங்களது அமைதி விருப்பம் பலவீனமாகப் பார்க்கப்படக்கூடாது என்றும் கூறியுள்ளார். நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

