\
“Save Your Lives!” Torrential Rain Ravages Japan!
Japan Flood Reuters

‘உயிரைக் காப்பாத்திக்கோங்க!’ ஜப்பானை புரட்டிப்போட்ட பேய் மழை?

முன் எப்போதும் பெய்யாத கனமழை ஜப்பானை உருக்குலைத்து அதிர்ச்சி அளித்துள்ளது.
Published on

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

நிலநடுக்கம், சுனாமி, கொப்பளிக்கும் எரிமலை என அவ்வப்போது ஜப்பான் இயற்கையின் சீற்றத்துக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது முன் எப்போதும் பெய்யாத கனமழை ஜப்பானை உருக்குலைத்து அதிர்ச்சி அளித்துள்ளது. என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்...

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் வரலாறு காணாத கனமழையால் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டோக்கியோவின் முக்கிய சர்வதேச விமான நிலையமான நாரிடாவில் சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் சிக்கித் தவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கானோர் அரசு கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

Japan Flood
Japan Flood Reuters

டோக்கியோவுக்கு கிழக்கே உள்ள சிபா மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. சிபா உள்ளிட்ட பகுதிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 45,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 115 மில்லிமீட்டர் மழை பதிவானது. இது வழக்கமாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் பதிவாகும் மழையின் அளவுக்கு சமமானதாகும்.

சிபா மாகாணத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்காக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் முதன்முறையாக மிக உயர்ந்த 5ஆம் நிலை எச்சரிக்கையை வெளியிட்டது.

இச்சிகாவா நகரில் வெள்ளத்தில் மூழ்கிய சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. சகுரா நகரில் வெள்ளநீரில் கார் சிக்கியதில் 66 வயது பெண் உயிரிழந்தார். மேலும் இருவர் தங்களது கார்களில் இருந்து வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

Japan Flood
Japan Flood Reuters

நாரிடா விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் இரவு தங்கிய நிலையில், 1,700 பேர் சிபா மாகாண அரசு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். மழை வெள்ளிக்கிழமை தணிந்தாலும், வெள்ள அபாயம் நீடிப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் அடிக்கடி நிகழ்வதும் தீவிரமும் அதிகரித்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“Save Your Lives!” Torrential Rain Ravages Japan!
மிகப்பெரிய மர்மத்துக்கு விடை? கிடைச்சாச்சு மாஸான ‘காஸ்மிக் க்ளூ’! உடைக்கப்படும் பிரபஞ்ச ரகசியம்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com