பள்ளியில் புகுந்த மர்ம நபர்.. 10க்கும் மேற்பட்டவர்களை சரமாறியாக கொன்று குவித்த பயங்கரம்!
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஓரேப்ரோ நகர். இங்குதான் ரிஸ்பெர்க்ஸ்கா எனப்படும் வயது வந்தோருக்கான பள்ளிக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்தும் விதமாக இப்பள்ளி அமைந்துள்ளது.
இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை ( 4.2.2025) அன்று பயங்கர துப்பாக்கி சூடு நடந்துள்ளது. பள்ளியிலுள் புகுந்த மர்ம நபர் ஒருவர், சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால், 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், பலர் காயமடைந்தனர். இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், பலரை சுட்டு வீழ்த்திய அந்த மர்மநபரும் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் இதுகுறித்து தெரிவிக்கையில், " சம்பவத்தில் 11 பேர் இறந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தெரியவில்லை. அவர்களது நிலை குறித்து தற்போது எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளனர்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மதியம் 12:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர் யார், அவரின் நோக்கம் என்ன? ஆகியவை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களில் மாணவர்கள் எத்தனை பேர் ஆசிரியர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தெரியவில்லை.