
காஸா நகரின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல் குத்ஸ் மருத்துவமனை பகுதியில், தொடர்ச்சியாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் வடக்கு காஸா பகுதியில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகளும் தாக்குதலுக்கு தப்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் காஸாவிற்குள் செல்லும் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால், நிவாரணப் பொருட்கள் தாமதமாக காஸாவிற்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் காஸா நகரில் தவறுதலாக ஏவுகணைகளை வீசி, பாலஸ்தீன மக்களை கொன்று வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸா சுகாதாரத்துறை தகவலின் படி, அங்கு 4,385 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 13,561 பேர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய விமானப்படை தாக்குதலில் இதுவரை காஸா நகரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் மொத்தமாக சிதைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 1,688 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசின் சமூகவலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
15 நிமிடத்திற்கு ஒரு பாலஸ்தீன குழந்தை மரணிப்பதாக மத்திய கிழக்கு ஆசியாவை கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
எல்லை வழியே 20 லாரிகள் காஸா நகரத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் வெறும் 22,000 தண்ணீர் பாட்டல்கள் மட்டுமே இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 23 லட்சம் பேர் வசிக்கும் நகரில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என ஐநா வேதனை தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் இந்தியா உட்பட உலக நாடுகள் பல எகிப்து வழியாக காஸாவிற்கு நிவாரண பொருட்களை கப்பல் மூலமும் விமான மூலமும் அனுப்பிவருகின்றன. இருப்பினும் அவற்றை காஸா நகருக்குள் கொண்டு சேர்ப்பது மிகவும் சவால் மிகுந்த பணியாக இருப்பதாக ஐநா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் காஸா நகரின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல் குத்ஸ் மருத்துவமனை தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் உள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் உள்ள அல் குச் மருத்துவமனையில் இருந்து இதுவரை 400 அவசர சிகிச்சை நோயாளிகளும், 1200 புற நோயாளிகளும், மருத்துவமனையை சுற்றி தங்கி இருந்த 12,000 மக்களும் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச போர் குற்றம் என்பதை இஸ்ரேல் மறந்துள்ளதாக பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் காட்டமாக பதிவிட்டுள்ளது. காஸாவில் 10 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் உத்தரவாதமின்றி இருப்பதாக Save the Children தன்னார்வ அமைப்பு கூறியுள்ளது. மருத்துவமனைகளில் மருந்து பொருட்கள் பற்றக்குறையால் பலருக்கு சிகிச்சை அளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மருந்து பொருட்கள் பற்றாக்குறை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 50,000 கர்ப்பிணிகள் போதிய மருத்துவ உதவிகள் இல்லாமல் தவிக்கிறார்கள் என Save the children அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒருபுறம் மருந்துகளின் தட்டுப்பாடு, மறுபுறம் இஸ்ரேலிய ராணுவத்தின் தொடர்ச்சியான தாக்குதல் என காஸா மக்களும் குழந்தைகளும் இருபெரும் சிக்கல்களுக்கு மத்தியில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு காஸாவில் இருக்கின்றனர்.