\
Saudi Airport - File photo
Saudi Airport - File photo Reuters

சவுதி பதற்றம்| மீண்டும் விமான நிலையம் மீது தாக்குதல்! இந்தியர் உயிரிழப்பு?

சவுதி விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்: பாதுகாப்பு சவால்கள் அதிகரிப்பு!
Published on: 
Summary

சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது ஹவுதிக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்துள்ளன. தம்மாம் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் சவுதி குடியிருப்பாளர் ஒருவர் உயிரிழந்தார், எட்டு பேர் காயமடைந்தனர். இந்தியர் உயிரிழந்தது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

சவுதி அரேபியாவுக்கும் ஹவுதிக்களுக்கும் இடையிலான மோதல் கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவின் விமானப் போக்குவரத்து வசதிகள் மற்றும் எரிசக்திக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது அக்டோபர் 2026-ல் ஏமனின் ஹவுதிகள் அடுத்தடுத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் (Drone) தாக்குதல்களை நடத்தினர். அக்டோபர் 11 அன்று விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். மீண்டும் அக்டோபர் 12 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் 11 பேர் காயமடைந்தனர்.

Airport attack
Airport attack Reuters

ஏமனில் சவூதி தலைமையிலான கூட்டணி நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் தொடுத்ததாக ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனால் சவுதியின் விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு குறித்து கவலைகள் அதிகரித்தது.

இந்நிலையில் சவுதியின் கிழக்குப் பகுதியில் உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்தத் தாக்குதலில் முதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலில், இந்தியர் ஒருவரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மேலும், இந்தியா, ஏமன் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Yemen war
Yemen warReuters

ஆனால், அக்டோபர் 22 அன்று வெளியான அசோசியேட்டட் பிரஸ் செய்தியின் புதுப்பிக்கப்பட்ட தகவலின்படி, இந்தத் தாக்குதலில் சவுதி குடியிருப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்; எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்தியர் உயிரிழந்ததாக அந்தப் புதுப்பிக்கப்பட்ட செய்தியில் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்தியர் உயிரிழந்தது குறித்த தகவல் இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

தாக்குதலால் விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆரம்பத்தில் சில விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர் விமான நிலையத்தின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியதாகவும், விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுவது அந்நாட்டின் பாதுகாப்புக்கு முக்கிய சவாலாக மாறியுள்ளது. இருப்பினும், தம்மாம் விமான நிலையத்தின் மீதான இந்தத் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

Saudi Airport - File photo
காஸாவில் பசி தாண்டவம்.. ஐ.நா. எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com