\
Gaza Starvation Crisis UNs Shock Decision
GazaReuters

காஸாவில் பசி தாண்டவம்.. ஐ.நா. எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்!

காஸாவில் மாதந்தோறும் உணவு உதவி பெறும் மக்களின் எண்ணிக்கையை 16 லட்சத்தில் இருந்து 11 லட்சமாகக் குறைக்க உலக உணவுத் திட்டம் முடிவு செய்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

2025ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்வைத்த 20 அம்ச காஸா அமைதித் திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவது உள்ளிட்ட திட்டங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இருப்பினும், ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதில் தேக்கநிலையே இருந்து வருகிறது.

இந்நிலையில், காஸாவில் போதிய நிதி இல்லாததால், சுமார் 5 லட்சம் பாலஸ்தீன மக்களுக்கான மாதாந்திர உணவு உதவியை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. ஏற்கெனவே போர், உணவுப் பற்றாக்குறை, வீடுகளை இழந்த நிலை எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Gaza
GazaReuters

காஸாவில் மாதந்தோறும் உணவு உதவி பெறும் மக்களின் எண்ணிக்கையை 16 லட்சத்தில் இருந்து 11 லட்சமாகக் குறைக்க உலக உணவுத் திட்டம் முடிவு செய்துள்ளது. மேலும், வழங்கப்படும் உணவின் அளவும் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சுமார் 75,000 குடும்பங்களுக்கு வழங்கப்படும் பண உதவியும் குறைக்கப்பட்டுள்ளது. சமைக்க முடியாத மக்களுக்கு தினமும் வழங்கப்படும் சூடான உணவின் எண்ணிக்கை 2.5 லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்றடையக் கடினமான பகுதிகளில் உள்ள சில குடும்பங்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு வழங்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

காஸாவின் சுமார் 23 லட்சம் மக்களில், 14 லட்சம் பேர் உணவில்லாமல் வாழ்நது வருகிறார்கள் என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.

Gaza
Gazareuters

காஸா மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் (West Bank) அடுத்த ஆறு மாதங்களுக்கு அத்தியாவசிய உதவிகளைத் தொடர 450 மில்லியன் டாலர் நிதி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் உலக நாடுகள் உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, காஸாவின் ஹமாஸ் நிர்வாகத்தின்கீழ் செயல்படும் அரசு ஊடக அலுவலகம், உணவு உதவி குறைப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்றும், பஞ்சம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், காஸாவில் மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. போதிய நிதி கிடைக்காவிட்டால், உணவுக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களின் நிலை மேலும் மோசமடையக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளது.

Gaza Starvation Crisis UNs Shock Decision
அமெரிக்காவால் ஆபத்து? இந்தியாவை நாடும் நெதன்யாகு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com