‘இதோ வந்துட்டேன்ல...’ 3 ஆண்டுகள் தொடர் தேடலில் 200 கி.மீ பயணித்து தன் காதலியை சென்றடடைந்த புலி!
ரஷ்யாவில் ஸ்வேத்லயா என்ற பெண் புலியை தேடி, 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 ஆண்டுகள் பயணம் செய்த ஆண் புலி, இறுதியில் பெண் புலியை கண்டடைந்துள்ள சம்பவம் பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுக்கு மட்டும்தான் காதலா என்றால், இல்லை. காக்கா குருவிக்கு கூட உண்டு சார் காதல்! கேட்பதற்கு இது ஏதோ சினிமா வசனம் போல் இருக்கலாம். ஆனால், இவற்றை நிரூபித்து காட்டி இருக்கிறது ரஷ்யாவில் நடந்த சம்பவம் ஒன்று. என்ன
ரஷ்யாவில் சிஹோடா மலைப்பகுதியிலிருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு, இரண்டு புலிக்குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் பெண் புலிக்கு ஸ்வேத்லயா என்றும், ஆண் புலிக்கு போரீஸ் என்றும் பெயரிட்டுள்ளனர் வன அதிகாரிகள்.
இரண்டும் கிட்டதட்ட 18 மாதங்கள் ஒன்றாக வளர்க்கப்பட்டுள்ளன. பிறகு வனத்தில் திறந்துவிடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்து, தனித்தனியாக எல்லைகளை பகிர்ந்து இவை இரண்டையும் விட்டு வந்துள்ளனர்.
இதில், ஸ்வேத்லயாவை போரீஸிடம் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் போரீஸை விட்டுள்ளனர். இதில் சைபீரியா வனப்பகுதியில் போரீஸ் விடப்பட்டுள்ளது. இதற்குப் பிறகுதான் நடந்துள்ளது அந்த ட்விஸ்ட்!
சைபீரியா பகுதியில் விடப்பட்ட போரீஸ் அந்த இடத்தை தனது இருப்பிடமாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்துள்ளது. மற்றொரு புறத்தில் இருந்த ஸ்வேத்லயாவோ வேறு எங்கும் செல்லாமல் தன்னை விட்ட இடத்திலேயே சுற்றி திரிந்துள்ளது. இரண்டு புலிகளின் நடமாட்டத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த வனத்துறையினர் என்னதான் நடக்கிறது என்று தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இப்படியே மூன்று ஆண்டுகளாக பயணம் செய்த போரீஸ் ஸ்வேதலயா இருக்கும் இடத்தை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சென்று சேர்ந்தது. இதனை கண்ட வனத்துறையினர் மிகுந்த ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த காதலுக்கு குறுக்கே நிற்க வேண்டாமென (!) இரண்டையும் ஒன்றாக விட்டுச்சென்றுள்ளனர் அதிகாரிகள். தற்போதுவரை, அதாவது கடந்த ஆறு மாதங்களாக இரண்டும் சேர்ந்த வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மகிழ்ச்சியாக தங்களது வாழ்நாளை கழிக்கும் இரண்டு புலிகளும் தற்போது குட்டிகளை பெற்றெடுத்துள்ளன. காதலுக்கு எல்லை இல்லை என்பதை எல்லைகளை கடந்து நிரூபித்து விட்டன இந்த புலிகள்.