முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை.. அதிர்ந்து நிற்கும் ரஷ்யா.. வெற்றிபெற்ற அமெரிக்காவின் திட்டம்!
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில், 1970-களின் தொடக்கத்தில் இருந்து 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் ஆட்சி புரிந்து வந்தனர். அந்தக் குடும்பத்தில் இறுதி ஆட்சியாளராக சிரிய அதிபர் பஷார் அல் அசாத் (Bashar Al-Assad) செயல்பட்ட நிலையில், அவருக்கு எதிராக கடந்த 2011-ஆம் ஆண்டு சிரியாவின் பல பகுதிகளில் கிளர்ச்சி ஏற்பட்டது.
இதில் பஷார் அல் அசாத்தின் அரசுக்கு ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே கடந்த ஆண்டு உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை பயன்படுத்தி சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக திடீர் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதில் பஷார் அல் அசாத்தின் படைகள் தோல்வியைத் தழுவிய நிலையில், சிரியாவின் தலைநகர் தமஸ்கசை புரட்சிப் படை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதனால் அதிபர் பஷார் அல் அசாத் நாட்டைவிட்டு தப்பி ரஷ்யாவுக்கு ஓடிய நிலையில், புரட்சிப் படையின் தலைவர் அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) சிரியாவின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றதும் சிரியாவில் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் பஷார் அல்-அசாத் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பஷார் அல்-அசாத் ரஷ்யாவில் இருக்கும் நிலையில், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தண்டனை அவர் மீண்டும் நாடு திரும்புவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் பஷார் அல்-அசாத் அரசுக்கு ரஷ்யா நீண்டநாள் ஆதரவு கொடுத்து வந்தது. இதன் காரணமாக, அவருக்கு எதிரான குழுக்கள் அமெரிக்க ஆதரவோடு பஷார் அல்-அசாத் அரசை முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் பஷார் அல்-அசாத் மீண்டும் சிரியாவுக்குத் திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது ரஷ்யாவுக்குப் பின்னடைவாகவும், அமெரிக்காவின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது.

