கனவுல கூட இது நடக்காது! மொத்தமாக மாறும் தங்கம் விலை? ரஷ்யா செய்தது என்ன?
உக்ரைன் போரால் பொருளாதார சிக்கலில் சிக்கிய ரஷ்யா, 2026 முதல் 9 மாதங்களில் 62 டன் தங்கத்தை சீனாவுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் தங்கத்தின் விலை பெரிதாக பாதிக்கப்படாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர் - கார்த்திகேயன்
எந்தவொரு நாட்டின் மத்திய வங்கி அதிக தங்கத்தை இருப்பு வைத்திருக்கிறதோ, அதனை பொறுத்து அதன் பலம் அமைகிறது. தங்கத்தின் மதிப்பு எப்போதும் நிலைத்திருப்பதால், அது அந்த நாட்டிற்கு மிகப்பெரிய கவசமாக செயல்படுகிறது. மேலும், பணவீக்கம் அதிகமாக ஏற்படும்போது, அதில் இருந்து பாதுகாக்க தங்கம் மிகப்பெரிய அளவில் உதவுகிறது. இதனால் தான் அமெரிக்கர, சீனா, ரஷ்யா மாதிரியான உலக நாடுகள், தங்கத்தை அதிக அளவில் இருப்பு வைத்துள்ளன. குறிப்பாக, தங்கத்தை அதிகம் வைத்துள்ள நாடுகளில், ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.
இப்படியான சூழ்நிலையில், தங்களது தங்க கையிருப்பை பெருமளவில் சீனாவுக்கு ரஷ்யா விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உக்ரைன் மீதான போரின் காரணமாக, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ரஷ்யா, பாதுகாப்புத்துறை மற்றுமு் ராணுவ செலவிணங்களை ஈடுகட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க, 2026-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும், தனது இருப்பில் இருந்து சுமார் 62 டன் அளவிலான தங்கத்தை, சீனாவுக்கு ரஷ்யா விற்பனை செய்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 6.2 டன் தங்கத்தை விற்பனை செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
லண்டன் தங்க சந்தைகளுக்கு பதிலாக, ஹாங்காங் வழியாக, இந்த தங்க விற்பனை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. ரஷ்யாவிலிருந்து ஹாங்காங்கிற்குச் செல்லும் தங்கத்தின் அளவு முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலர் மீதான சார்பை குறைக்கவும், அந்நிய செலாவணி இருப்பை வலுப்படுத்தவும் சீனா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால், உலக அளவில் தங்கம் விலையில் பெரிய வீழ்ச்சி ஏற்படாது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த 2024-ல் 25 சதவீதம் வரை ஏறிய தங்கம் விலை, 2025-ல் 67 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், 2026-ல் 4 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. இது சாதாரண சரிவு தான். வரும் காலங்களில், தங்கத்தின் சரிவு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம். அது பெரும்பாலும் நடக்காது என்றும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

