தங்கம் விலை மாறுமா? அமெரிக்காவில் அதிரடி மாற்றம்.. இன்னும் இரண்டே வாரங்களில் முடிவு!!
செய்தியாளர் - கார்த்திகேயன்
முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளை ஆபத்தான தொழில்நுட்பப் பங்குகளில் இருந்து விலக்கி, பாதுகாப்பான அரசுப் பத்திரங்களை நோக்கித் திருப்பினர். இதன் காரணமாகப் பத்திரங்களின் விலை உயர, வட்டி விகிதங்கள் கீழே இறங்கின. 10 ஆண்டு கால பத்திர வட்டி விகிதம் 5.11 சதவீதத்திற்கும் கீழே சரிந்து 5.102 சதவீதமாக மாறியது. அதைப் போலவே, 30 ஆண்டு கால பத்திரம் 5.439 சதவீதமாகவும், 2 ஆண்டு கால பத்திரம் 4.751 சதவீதமாகவும் குறைந்தது. பொருளாதார விதிகளின்படி, பத்திரங்களின் விலை ஏறும்போது அதன் வட்டி விகிதம் குறையும். அதன்படி தான், தற்போது வட்டி விகிதம் குறைந்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது செப்டம்பர் மாத நுகர்வோர் பணவீக்கத் தரவுதான்.
நிபுணர்கள் எதிர்பார்த்ததை விடப் பணவீக்கம் சற்று அதிகமாகவே பதிவானது. குறிப்பாக, பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்தது ஒட்டுமொத்த விலைவாசியையும் உயர்த்திக் காட்டியது. இந்தச் சூழலில், அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த கட்ட வட்டி விகித முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்துள்ளது. ஆரம்பத்தில் வட்டி விகிதம் உயர 58 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், தற்போதைய சந்தை நிலவரங்களை வைத்து பார்க்கும்போது, 31 சதவீதம் வரை வட்டி விகிதம் உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதைத் தீர்மானிக்கப் போகும் அந்தப் பணவீக்க மற்றும் வட்டி விகித அறிவிப்புகளுக்காக உலகளாவிய முதலீட்டாளர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒருவேளை அமெரிக்க அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் அதிகரித்தால், தங்கத்தின் விலை குறையலாம் என்றும், வட்டி விகிதம் குறைந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, பணவீக்கம் கட்டுக்குள் வராததால், வட்டி விகிதம் குறைவதை விட, லேசான அளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, இதன் அடிப்படையில், தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்பதும் நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது

