’ரஷ்ய தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற வேண்டும்’ - மீண்டும் வலியுறுத்திய புதின்!

ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அதிபர் புதின் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதின்
புதின்ட்விட்டர்

நேட்டோ படைகளின் விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, 2 வருடமாக நடைபெறும் உக்ரைன் போரில் 3 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், 1999களில் இருந்தே ரஷ்யாவின் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. அந்த நாட்டின் மக்கள்தொகை 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 14.34 கோடியாக உள்ளது. மக்கள் தொகை தொடர்ந்து குறைந்துவருவதால் வரும்காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ரஷ்ய அதிபர் புதின் அந்த நாட்டு மக்கள் குறைந்தது 8 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுகுறித்து கடந்த ஆண்டு இறுதியில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய புதின், ”நம் முன்னோர்கள் 4 - 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டு, வலுவான தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. நமது மூதாதையர்கள் 8 அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற்றெடுத்தனர் என்பதை ரஷ்ய குடும்பங்கள் நினைவில்கொள்ள வேண்டும். இந்த சிறந்த மரபுகளைப் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். தற்போதும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

புதின்
படை வீரர்களை அதிகரிக்க திட்டம்... பெண்கள் 8 குழந்தைகளைப் பெறவேண்டும்.. ரஷ்யா அதிரடி

ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அதிபர் புதின் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, “ஒரு தேசமாக வாழ, ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரண்டு குழந்தைகளாவது இருக்க வேண்டும். ஒரே ஒரு குழந்தை இருந்தால், எங்கள் மக்கள்தொகை குறையும்” என அவர் தொழிற்சாலை தொழிலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டில், ரஷ்ய ராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், போரினால் ஏராளமான ரஷ்யர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அதிக அளவில் மக்கள் ரஷ்யாவைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com