பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா

பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா

பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா

கடந்த 1980களில் அமெரிக்காவுடன் பனிப்போர் ஏற்பட்டபோது, ரஷ்யா மிகப் பெரிய அளவிலான போர் ஒத்திகையை நடத்தியது. அதற்குப் பின் vostok-2018 என்ற பெயரில் தற்போது அதே வகையிலான ஒத்திகைக்கு ரஷ்யா தயாராகி வருகிறது. கிழக்கு சைபீரியாவில் நடக்கும் இந்தப் போர் ஒத்திகைக்காக சீனாவும், மங்கோலியாவும் தங்களது படைகளை அனுப்பியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த முறை அமெரிக்கா தலைமையிலான நேட்டோவுக்கும், ரஷ்யாவுக்கு இடையிலான விரிசல் அதிகரித்து பதற்றம் ஏற்படும் சூழலில் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது. எந்த மாதிரியான பயிற்சியில் ஈடுபடுவது என்ற திட்டங்கள் இன்றும் நாளையும் வகுக்கப்படுகிறது. அதற்குப் பின் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தீவிரமான ஒத்திகை நடக்கப் போவதாக ரஷ்ய ராணுவத் தளபதி ஜெனரல் கெரசிமோவ் தெரிவித்துள்ளார்.

வோஸ்டாக்-2018 என பெயரிடப்பட்டுள்ள இந்த போர் ஒத்திகையில் ரஷ்யாவின் 36 ஆயிரம் டாங்கிகள், ஆயிரம் போர் விமானங்கள், ஆயுதம் தாங்கிய ராணுவ வாகனங்கள் பங்கேற்கின்றன. மொத்தமாக ஐந்து இடங்களில் ஒத்திகை நடைபெறவுள்ளது. குறிப்பாக ஜப்பானை ஓட்டிய கடல் பகுதியில் நடக்கும் ஒத்திகையில் ரஷ்யாவின் 80 கடற்படை கப்பல்கள் பங்கேற்கின்றன.  அதே சமயம் ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள குரில் தீவு அருகே இந்த போர்ப் பயிற்சிகள் நடத்தப்படமாட்டாது என ரஷ்யா அறிவித்துள்ளது. எனினும் தனது நாட்டின் எல்லை அருகே நடத்தப்படவிருப்பதால், ஜப்பான் கவலை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

சீனா மற்றும் மங்கோலியா எல்லை அருகே நடக்கும் போர் ஒத்திகையில் மூன்று பாராசூட் துருப்புகள் முக்கிய பங்காற்றவுள்ளன. ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்குப் பகுதி வரை ராணுவ தளவாடங்களை விரைவாக கொண்டு செல்வதற்காக இந்த போர் ஒத்திகை நடத்தப்படுகிறது. குறிப்பாக நடுவானிலேயே போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவது, நீண்ட தூரப் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான துருப்புகளை விரைவாக கொண்டு செல்வது ஆகியவை தான், இந்த போர் ஒத்திகையின் நோக்கம் என ரஷ்யா அறிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது எந்த அளவுக்கு படைகள் குவிக்கப்பட்டதோ, அதே அளவுக்கு, இந்த போர் ‌ஒத்திகைக்கும், படைகள்‌ குவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பயிற்சிக்காக சீனா தனது தரப்பில் இருந்து 3 ஆயிரத்து 200 துருப்புகளையும், ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ தளவாடங்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. மேலும் தனது விமானப்படையின் வலிமையை பறைசாற்றுவதற்காக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் சீனா அனுப்பி‌ வைத்திருக்கிறது.

இதே போல் மங்கோலியா சார்பிலும் படை வீரர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மத்திய ஆசியாவில் நிலவும் இஸ்லாமிய பிரிவினைவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ள அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, அதனை முறியடிப்பதற்காகவே தற்போது சீனாவுடன் கைகோர்க்கும் முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளார். இந்தப் ‌பயிற்சியின் மூலம் இரு நாட்டுக்கு இடையே, அனைத்து துறைகளிலும் நட்புறவு மேம்படும் என்றும் செர்ஜி ஷோய்கு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அதற்கேற்றபடி சீனாவும் தற்போது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகப்படுத்தி இருக்கிறது. பனிப் போர் நடந்த காலத்தில் சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யாவும், சீனாவும் எதிரிகளாக மோதிக் கொண்ட நிலையில், தற்போது பழைய கசப்புணர்வுகளை மறந்து, ராணுவ ரீதியில் வலுவான கூட்டுறவை அமைக்க முன்வந்திருப்பது, அமெரிக்காவை சற்று அச்சுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு புறம் அமெரிக்காவுக்கு தனது ராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையிலான நடவடிக்கைகளை ரஷ்யா தன்னந்தனியாகவே தொடங்கி இருக்கிறது. சிரியாவை ஓட்டிய மத்திய தரைக்கடல் பகுதியில் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிலை நிறுத்தி தனது ராணுவ பலத்தை பறைசாற்றி வருகிறது. சிரியாவில் இருந்து கிளர்ச்சியாளர்களை விரட்டி அடிக்கவும் இந்த போர் பயிற்சியை ரஷ்யா பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாட்டுக்கும் போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முழு உரிமை இருப்பதாகவும், இதனை எந்தவொரு சர்வதேச நாடுகளாலும் தடுக்க முடியாது என நேட்டோ செய்திதொடர்பாளர் டைலன் ஓயிட் தெரிவித்திருக்கிறார். எனினும் அந்த போர் பயிற்சிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உக்ரைனில் இருந்து கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைந்துக் கொண்டதால் ரஷ்யா மீது நேட்டோ ஆவேசத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது முதலே இரு தரப்புக்கும் இடையிலான விரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை சர்வதேச நாடுகள் வாங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதால், அதனை முறியடிக்கும் முயற்சியாகவும் ரஷ்யா இந்த போர் ஒத்திகையை முன்னெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒத்திகையின் போது இடம்பெறும் நவீன ராணுவ தளவாடங்களை உலக நாடுகளுக்கு விளம்பரம்படுத்தி, அமெரிக்காவின் தடைகளை தகர்க்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் மறைமுக திட்டம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ராணுவ பலத்தை நிரூபிப்பது, ராணுவ தளவாட விற்பனை, சீனாவுடனான நட்புறவு என ஒரே நேரத்தில் பல இலக்குகளை அடைய வேண்டும் என்ற ரஷ்யாவின் இத்திட்டம் வெற்றி பெறுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com