ரஷ்யாவில் சூடுபிடித்த தேர்தல்.. கட்சிகளுக்குத் தடை.. புதின் ஆதிக்கம் தொடருமா?
உக்ரைன் மீதான போர் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தல் மூன்று நாட்கள் வாக்குப்பதிவுடன் தொடங்கியுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடின் ஆதரவு பெற்ற ஆளும் 'யுனைடெட் ரஷ்யா' (United Russia) கட்சிக்கு வெற்றி வாய்ப்பும் பெரும்பான்மை ஆதரவும் அதிகமாக இருப்பதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் போர் தொடுத்தது. அது 4 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் மீதான போர் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தல் மூன்று நாட்கள் வாக்குப்பதிவுடன் தொடங்கியுள்ளது. ரஷ்யாவில் நாடாளுமன்றத்தின் கீழ் அவையான 'ஸ்டேட் டூமா' (State Duma) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் நாடாளுமன்றத் தேர்தல் மூன்று நாட்கள் வாக்குப்பதிவுடன் தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 18 தொடங்கிய இந்தத் தேர்தல் நாளையுடன் (செப்.20) முடிவடையப் போகிறது.
ரஷ்யாவின் மொத்தமுள்ள 450 நாடாளுமன்றத் தொகுதிகளில் 225 இடங்கள் தேர்தல் மூலமாகவும், மீதமுள்ள 225 இடங்கள் நேரடித் தொகுதி (Single-member Constituencies) முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
போரை பகிரங்கமாக எதிர்த்த 'யாப்லோகோ' (Yabloko) கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் போட்டியிட முடியாமல் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் நோக்கில் பல பிராந்தியங்களில் ஆன்லைன் மின்னணு வாக்குப்பதிவு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், கிரெம்ளின் ஆதரவுக் கட்சிகள் ஒன்றிணைந்து 2001-இல் உருவாக்கப்பட்ட ரஷ்யாவின் ஆளும் கட்சி 'யுனைடெட் ரஷ்யா' (United Russia), அதிபர் விளாடிமிர் புதினை ஆதரித்து வருவதுடன், அன்று முதல் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கருத்துக்கணிப்புகளின்படி, 37% முதல் 47% வரையிலான வாக்குகளைப் பெற்று அக்கட்சி முன்னிலையில் உள்ளது. இது கட்சிக்குத் தேவையான 300-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றுத் தந்து, சிறப்புப் பெரும்பான்மையைத் (Supermajority) தக்கவைக்க உதவும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் LDPR கட்சிகள் பெயரளவில் எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், உக்ரைன் போர் மற்றும் அரசின் முக்கியக் கொள்கைகளில் அதிபர் புடினுக்கு முழு ஆதரவு அளிப்பவைகளாகவே உள்ளன.

