தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர் | ”சரணடையாது..” - புதின் உரைக்கு உக்ரைன் அதிபர் பதிலடி!
தொடரும் ரஷ்யா - உக்ரைன் போருக்கு மத்தியில், அதிபர் புதின் உரைக்கு உக்ரைன் அதிபர் பதிலடி கொடுத்துள்ளார்.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே, மாஸ்கோவில் உள்ள புதின் வீட்டின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அது மொத்தம் 91 ட்ரோன்களை ஏவியதாகவும் அவற்றை எல்லாம் அழித்ததாகவும் ரஷ்யா தெரிவித்திருந்தது. இதற்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால், இதை உக்ரைன் மறுத்திருந்தது. என்றாலும், உக்ரைன் தாக்கிய ட்ரோன்களை ரஷ்யா ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, 2026-ஆம் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய உரையில், அதிபர் புதின் போர்க்களத்தில் உள்ள வீரர்களை வெகுவாகப் பாராட்டினார். சுமார் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் போரில் (ரஷ்யாவின் பார்வையில் 'சிறப்பு இராணுவ நடவடிக்கை'), ரஷ்யா தனது இலக்குகளை எட்டி வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆற்றிய புத்தாண்டு உரையில், ‘உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறது. ஆனால் உறுதியான உத்தரவாதங்கள் இல்லாத எந்தவொரு ஒப்பந்தமும் மோதலை நீடிக்கச் செய்யும். கிட்டத்தட்ட நான்கு வருட போரில் உக்ரைன் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்.
இது இரண்டாம் உலகப்போரின்போது பல உக்ரைன் நகரங்களை ஜெர்மன் ஆக்கிரமித்ததைவிட நீண்டது. ஆனால் சோர்வு, சரணடைதலாக மாறாது. ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும், ஒவ்வொரு முடிவும் இப்போது அதைப் பற்றியதாகவே உள்ளது. ஒரு சமாதான ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளது. அது அமைதி, உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியை தீர்மானிக்கும்" என அதில் தெரிவித்துள்ளார்.

