அலை அலையாக ஏவுகணைகள்! உக்ரைன் உயிர் நாடி காலி.. சரிந்து விழுந்ததா தலைநகர் கீவ்?
செய்தியாளர் - கார்த்திகேயன்
கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு தான் நேட்டோ. ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவை சேர்ந்த நாடுகளுக்கு இடையே உள்ள ராணுவ மற்றும் அரசியல் கூட்டணியாக இந்த அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில், 33-வது நாடாக உக்ரைன் இணைய முடிவு செய்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாட்டின் மீது, கடந்த 2022-ஆம் ஆண்டு அன்று போரை தொடுத்தது. அன்று தொடங்கிய போர் இன்று வரை தொடர்ந்து நீண்டு வருகிறது. இந்த நிலையில், இந்த போரின் ஒரு பகுதியாக, உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், ரஷ்யா மிகப்பெரிய இரவு நேர வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
அதாவது, 36 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 172 ட்ரோன்கள் மூலம், மிகப்பெரிய குண்டு மழையை உக்ரைன் மீது ரஷ்யா வீசியுள்ளது. இந்த தாக்குதலில், தலைநகர் கீவ்-ல் உள்ள முக்கிய எரிசக்தி மற்றும் மின் கட்டமைப்புகள் கடுமையாக தேசம் அடைந்துள்ளன. இதன்காரணமாக, மின்சார விநியோகத்தில் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், டினிப்ரோ நதியின் குறுக்கே தலைநகர் கீவை இணைக்கும் மிக முக்கியமான வடக்கு பாலத்தின் மீதும், பல ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டு பழுது பார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கீவ் நகரின் சோலோமியன்ஸ்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளால், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு மழலையர் பள்ளி கட்டிடம் போன்ற கட்டமைப்புகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 8 பேர் வரை படுகாயம் அடைந்திருப்பதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை பல ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்த போதிலும், இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் வரவிருக்கும் கடும் குளிர்காலத்திற்கு முன்பு நாட்டின் முக்கியமான எரிசக்தி கட்டமைப்புகளை முடக்கும் நோக்கில் ரஷ்யா தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

