இந்திய விமானப் படை மாஸ்! 13,000 அடியில் உலக சாதனை! சிங்கம் போல் இறங்கிய விமானம்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
கிழக்கு லடாக் பகுதியில் நியோமா என்ற விமான தளம் இயங்கி வருகிறது. இந்தியாவையும், சீனாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள முக்கியமான ராணுவ தளமாக இது பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில், இந்திய விமானப்படையின் IL-76MD என்ற கனரகப் போக்குவரத்து விமானம், மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13 ஆயிரத்து 629 அடி உயரத்தில் அமைந்துள்ள விமான தளத்தில், இந்த விமானம் தரையிறக்கப்பட்டு உலக சாதனை செய்துள்ளது. இதுவரை பெரிய கனரக விமானங்கள் தரையிறக்கப்பட்டதிலேயே, இதுதான் மிகப்பெரிய உயரம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்திய விமானப்படையின் இந்த சாதனை, உலக அரங்கில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, அதிக உயரத்தில் காற்று மிகவும் மெல்லியதாக இருப்பதால், விமான இன்ஜின்களின் செயல்திறன் கணிசமாக குறையும். இதனால், இதுமாதிரியான பகுதிகளில், பெரிய விமானங்களை தரையிறக்குவதற்கு துல்லியமாக செயல்பட வேண்டும். இதுமட்டுமின்றி, உயரமான பகுதிகளில் இன்ஜின் இயங்குவதற்கு தேவையான ஆக்சிஜன் குறைவாக இருப்பதும், இந்த விமான தரையிறக்குதலை பெரும் சவாலான காரியமாக மாற்றியுள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக, கடுமையான குளிர், சீரற்ற காற்று போன்ற இயற்கை சூழல் வழக்கமாக இருக்கக் கூடிய லடாக் போன்ற மலைப்பகுதிகளில் விமானத்தை தரையிறக்கியிருப்பது, இந்திய விமான படையின் திறனை உலகிற்கே எடுத்துக் காட்டியுள்ளது. வெறும் சாதனைக்காக மட்டும், இந்த விமானம் தரையிறக்கப்படவில்லை. எல்லைப் பகுதிகளில், ராணுவ வீரர்களையும், ராணுவ தளவாடங்களையும் விரைவாக கொண்டு செல்வதற்கான இந்தியாவின் போக்குவரத்து திறன், வலுவாக மாறியிருப்பதை இது உணர்த்துகிறது. இதுகுறித்து இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளது. இந்த பதிவை பார்த்த பலரும், விமான படையின் அசாத்திய திறனை பாராட்டி வருகின்றனர்.

