அதிபர் மாளிகை மீது ஹவுதி தாக்குதல்.. நூலிழையில் உயிர்தப்பிய ஏமன் பிரதமர்.. நடந்தது என்ன?
சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும், ஏமன் அரசாங்கத்தை ஒழிக்கும் நோக்கில் அந்நாட்டின் அதிபர் மாளிகையைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், பிரதமரின் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 4 உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஏமன் பிரதமர் மற்றும் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
2014-ம் ஆண்டு ஏமனின் முன்னாள் அதிபர் அப்த்ரப்பூ மன்சூர் ஹாதி (Abdrabbuh Mansur Hadi) அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றியதுடன் அந்நாட்டின் தலைநகரான சனாவை (Sanaa) ஹவுதி கிளர்ச்சிக் குழு கைப்பற்றியது. அன்றிலிருந்து, சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி படைக்கு இடையே உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. எனினும், 2022-ஆம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே அமலுக்கு வந்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு, பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்தச்சூழலில் தான், கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் அமெரிக்கா இடையே தொடங்கிய போரின் காரணமாக மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட பதற்றம், ஏமனில் மீண்டும் உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர், ஏமனில் உள்ள பிற பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் தற்போது அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர். கடந்த மாத தொடக்கத்தில், ஹவுதிகள் ஏமன் கடற்கரையோரமாக முன்னேறி, முக்கிய துறைமுக நகரமான மோக்காவையும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் தீவுகளையும் கைப்பற்றினர். இதனால், அமெரிக்கா ஆதரவு சவுதி அரேபியாவின் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியா, அதிகாரப்பூர்வ ஏமன் அரசுடன் இணைந்து ஹவுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேசயம், ஹவுதிக்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்தச்சூழலில் தான், ஏமன் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஏடன் நகரில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசின் தலைமையகமாகச் செயல்பட்டு வரும் அதிபர் மாளிகையைக் குறிவைத்து, அக்டோபர் 15ஆம் தேதியான நேற்று, ஹவுதி கிளர்ச்சிப் படையினர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், பிரதமர் ஷயா அல்-சிந்தானியின் (Shaya Mohsin al-Zindani) பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 2 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும், பிரதமர் மற்றும் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அதிபர் மாளிகை வளாகத்திற்குள் சவுதி அரேபியாவின் ராணுவ நடவடிக்கைத் தலைமையகம் செயல்பட்டு வருவதாகவும், அதைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ராணுவப் படைகள் எங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும் அவற்றைக் குறிவைத்துத் தாக்குவது தங்களது நடவடிக்கையின் ஒரு பகுதி என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
முன்னதாக, ஏமனில் ஹவுதி படையினருக்கும், சவுதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற அரசுப் படையினருக்கும் இடையே மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், துருக்கி, சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மெக்கா ஒப்பந்தத்தின் படி, ஹவுதிக்களுக்கு எதிராக இந்த 3 நாடுகளும் ஒருங்கிணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
