5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்த அறிவிப்பு.. ஈரான் மீதான போரை தொடர சவுதி அழுத்தம்?
ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா காமேனி அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டுத்தாக்குதலால் பிப்ரவரி 28-ம் தேதி கொல்லப்பட்டார். மேலும், முக்கியத் தலைவர்களும் ராணுவத் தளபதிகளும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுப்போம் என சூளுரைத்த ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவத் தளவாடங்களையும், இஸ்ரேலையும் தாக்கத் தொடங்கியது. அதேசமயம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலும் ஈரான் மீது தொடர்ந்து வருகின்றன.
இந்த சூழலில் தான், உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கிவைத்துள்ளது. இதன்காரணமாக உலகளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், சமீபகாலமாக ஈரானிடம் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்து வரும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், 5 நாட்களுக்கு ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார். எனினும் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியதை மறுத்திருக்கும் ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரான் உடனான போரைத் தொடருமாறு சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் ரகசியமாக வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஈரானின் தற்போதைய ஆட்சி இருக்கும் வரை வளைகுடா நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடரும் என சவுதி கருதுவதாகவும், இதனால் ஈரானின் ராணுவக் கட்டமைப்பை மட்டும் சிதைக்காமல், அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்க அமெரிக்காவை தூண்டி வருவதாகவும் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்கள், மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றி அமைப்பதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பு என முகமது பின் சல்மான் கருதுவதாக கூறப்படுகிறது. தொடர் தாக்குதல்கள் மூலம் ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்கி, தற்போதைய ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரும்பச் செய்வது சவுதி அரேபியாவின் திட்டமாக இருக்கலாம்.

