டிரம்ப் போட்ட ஒரே ஒரு கையெழுத்து.. முடிவுக்கு வரும் 43 நாள் முடக்கம்! அரசு ஊழியர்கள் ஹேப்பி!
43 நாட்களாக அமெரிக்கா அரசு முடங்கிப்போனது. அரசு அலுவலகங்கள் பல வெறிச்சோடி காணப்பட்டன அரசு ஊழியர்கள் சம்பளம் இன்றி தவித்து வந்தனர். இந்த நிலை நேற்று ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது. இதற்கு என்ன காரணம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். இவரது அதிரடி உத்தரவால் உலக நாடுகள் மட்டுமின்றி அமெரிக்க மக்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். இதில் வரிவிதிப்பு விவகாரமும் அடங்கும். அந்த வரிசையில் அடுத்த பிரச்னையாக வந்து சேர்ந்ததுதான் செலவின மசோதா.
அமெரிக்க மத்திய அரசு, அதன் செயல்பாடுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் மூலம் நிதி ஒதுக்கீடு பெற வேண்டும். அமெரிக்காவில் நிதி ஆண்டு அக்டோபர்1 முதல் தொடங்கும். எனவே, அதற்குள் நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று நிறைவேற்ற வேண்டும். ஆனால், இந்த முறை நிதி ஒதுக்கீட்டில் ஆளும் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயக் கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. அதாவது, அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். இந்த நிலையில், முந்தைய அதிபர் ஒபாமா கொண்டு வந்த மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கான அரசு மானியங்கள் டிசம்பருக்குள் முடிவடைகிறது. இதை நீட்டிக்க ஜனநாயக கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதை ட்ரம்ப் ஏற்க மறுக்கிறார். இதனால் மசோதாவை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்தது. இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும், அரசு நிர்வாகமும் முடங்கியது.
அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு முடக்கத்தில் இருந்தது இதுவே முதன் முறையாகும். மறுபுறம், அரசு முடக்கத்தால் விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது; ஐஆர்எஸ் கிட்டத்தட்ட பாதி ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதுபோக, 1 மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறார்கள். சுமார் 6,00,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது தவிர, பல லட்சம் பேர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், அரசு நிர்வாகம் முடங்கி 43 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார். கையெழுத்திட்டபின் பேசிய அவர், "அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய நபர்களுக்கு கோடிக்கணக்கான டாலர்களை பறிக்க முயற்சித்து அமெரிக்க அரசை முடக்க நினைத்தனர். மிரட்டி பணத்தை பறிக்க நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிதி மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதன் மூலம் 43 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த நிதி விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அமெரிக்க அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன.

