அடையாளம் முக்கியம் எனும் ராகுல்.. கூட்டணியில் நீடிக்கும் இழுபறி.. என்ன நடக்கிறது மகாகத்பந்தனில்?
பிகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி, காங்கிரஸ் புதிய பார்வையைத் தேர்ந்தெடுத்ததா எனும் கேள்வியை எழுப்புகிறது. ராகுல் காங்கிரஸின் தனித்துவ அடையாளத்தை பேண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் ஆராய்கின்றனர்.
பிகாரில் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் நீண்ட கால கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இந்த முறை தொகுதி பங்கீட்டில் காட்டும் இழுபறியானது, அக்கட்சி புதிய பார்வையைத் தேர்ந்தெடுத்துள்ளதா எனும் கேள்வியையும், கூடவே இது வரவிருக்கும் தேர்தலில் எத்தகு தாக்கத்தை உண்டாக்கும் எனும் கேள்வியையும் எழுப்புகிறது.
பிகார் சட்டமன்றம் 243 இடங்களைக் கொண்டது. 2020 தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75 தொகுதிகளை வென்ற நிலையில், அதன் பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 தொகுதிகளை மட்டுமே வென்றது. ஆட்சியமைக்க 122 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நிலையில், கடந்த முறையை விட இந்த முறை, ஒரே ஒரு தொகுதி மட்டுமே குறைவாக ராஷ்டிரீய ஜனதா தளம் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் முந்தைய முறையைப் போன்றே இந்த முறையும் 70 தொகுதிகளை வலியுறுத்தியதுடன், தான் விரும்பும் தொகுதிகளிலும் உறுதியாக நின்றது. இதன்காரணமாக, ராஷ்டிரீய ஜனதா தளமும், காங்கிரஸூம் மூன்று தொகுதிகளில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடும் வகையில், வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. எதிரணியான பாஜக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்துக்கே புறப்பட்டுவிட்ட நிலையில், முழு உடன்பாட்டை முடிக்க தடுமாறிக்கொண்டிருக்கிறார் லாலுவின் புதல்வரான தேஜ்ஸ்வி யாதவ்.
இது ஒருபுறம் இருக்க, கூட்டணியில் தொடர்ந்தாலும், கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பாதையிலேயே செல்லாமல், காங்கிரஸின் தனித்துவ அடையாள மொழியில் பேசுமாறு இந்த முறை கூறியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல். எவ்வளவு முயன்றாலும், யாதவர்கள் – முஸ்லிம்கள் வட்ட ஓட்டு வங்கியைத் தாண்டி ராஷ்ட்ரீய ஜனதா தளத்தால் செல்ல முடியவில்லை. ஆனால், காங்கிரஸுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக புமிஹார்கள் உள்ளிட்ட முற்பட்ட சமூகத்தினர், பட்டியலின மக்கள் இடையே காங்கிரஸால் செல்ல முடியும். அதற்கு காங்கிரஸ் தனி அடையாளத்தைப் பேணுவது முக்கியம்.
மோடி, நிதிஷ் ஆட்சிகளின் நிர்வாக சீர்கேடுகளை பேசுவதோடு, பிகாரில் ராகுல் நடத்திய வாக்குரிமை யாத்திரையை முன்னிறுத்தியும் உள்ளூர் காங்கிரஸ் பேச வேண்டும் என்று டெல்லி கூறியுள்ளது. கூட்டணியின் பெயரால் காங்கிரஸ் தன் அடையாளத்தை விட்டுக்கொடுக்க தேவையில்லை என்று காங்கிரஸ் வியூக வகுப்பாளர்கள் கொடுத்த யோசனைதான் இவ்வளவுக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸின் இந்தக் கெடுபிடிகள் ஒருபுறம் அக்கட்சியினர் மத்தியிலேயே ஆச்சரியத்தை உண்டாக்கினாலும், தேர்தல் நேரத்தில் கூட்டணிக்குள் இவ்வளவு இறுக்கம் தேவையா; இது தேர்தலில் எத்தகு தாக்கத்தை உண்டாக்குமோ எனும் கேள்விகளை பிஹார் அரசியல் விமர்சகர்கள் இடையே உருவாக்கியுள்ளது!