வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகம் முழுவதும் பரவலாக மழை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
காவிரி படுகை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 14,420 கன அடியிலிருந்து 22,500 கன அடியாக உயர்ந்தது. ஏற்கனவே அணை நிரம்பிய நிலையில் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் வினாடிக்கு 30,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படும் நீருடன் சேர்த்து 16 கண் மதகு வாயிலாகவும் 7,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பாசன தேவை குறைந்த நிலையில், அணையின் பாதுகாப்பு மற்றும் மின் உற்பத்தி தேவைக்காக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல், புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது வரை ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் 17 செமீ அளவுக்கு மிக கனமழை பதிவாகியுள்ளது,. மண்டபம் பகுதியில் 14.3 செமீ மழையும், பாம்பனில் 11.3 செமீ மழையும், ராமேஸ்வரத்தில் 9.5 செமீ மழையும் பதிவாகியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நிலையில், காரைக்காலில் கனமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆறு நாட்களாக இடைவெளிவிட்டு பெய்த மழைக்கு பிறகு நேற்றிரவு மட்டும் 5 மணி நேரத்திற்கு மேலாக நகரம் மற்றும் நிரவி, திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருநள்ளாறு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது.