அமெரிக்காவின் 5-ம் தலைமுறை போர் விமானம் மீது தாக்குதல்.. ஈரானுக்கு மிகப்பெரிய வெற்றி!
அமெரிக்காவின் நவீன F-35 போர் விமானம் ஈரானிய படைகளால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழி ஆதிக்கத்திற்கு பெரிய சவாலாக அமையும். ஈரானின் புரட்சிகர காவல் படை தாக்குதலுக்கான வீடியோ வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா எந்நேரம் வேண்டுமானாலும் ஈரானை தாக்கும் என்றே பரவலாக பேசப்பட்டது. அதன்படி இரண்டு வாரத்துக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஈரானை தாக்கி, இந்த போரை தொடங்கி வைத்தன.
இதற்கு ஈரான் சார்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதோடு உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணை பகுதியையும் ஈரான் முடக்கியது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த போரில் அமெரிக்காவின் அதீ நவீன F-35 போர் விமானம் ஒன்று ஈரானிய படைகளால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த 5-ஆம் தலைமுறை போர் விமானமான F-35 போர் விமானம் உலகின் மிகசிறந்த போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அதி நவீன விமானம் மீது தாக்குதல்..
ஸ்டெல்த் தொழில்நுட்பம் (Stealth Technology), சென்சார் ஃபியூஷன் (Sensor Fusion) தொழில்நுட்பம் என உலகிலேயே எந்த ஒரு விமானத்திலும் இல்லாத சிறப்புக்கள் இந்த விமானத்தில் அமைந்துள்ளது. இந்த விமானம் தற்போது ஈரானுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதில் ஒரு விமானம் ஈரானிய படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, சேதமடைந்து, மத்திய கிழக்கில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு F-35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால், இது ஈரானின் நேரடித் தாக்குதல் காரணமாக தரையிறக்கப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பதை அமெரிக்கா இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெளிவாக அறிவிக்கவில்லை.
அதே நேரம் ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC), இந்தத் தாக்குதலுக்குத் தாங்களே காரணம் என்று கூறி தாக்குதலுக்கான வீடியோவை வெளியிட்டுள்ளது. F-35 போன்ற நவீன விமானங்களையே ஈரானால் தாக்க முடியும் என்பது உறுதியானால், அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழி ஆதிக்கத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமையும் என்று கருதப்படுகிறது.

