அதிர்ச்சியில் புதின்.. ரஷ்யாவின் கோட்டையை தகர்க்கும் NATO நாடுகள்!
செய்தியாளர் - M.மீரா
2026 அக்டோபர் 12 அன்று, தவறான நாட்டுக் கொடியைப் பயன்படுத்திப் பயணித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒரு எண்ணெய்க் கப்பலை பிரான்ஸ் கடற்படை வழிமறித்தது, அதில் ஏறிச் சோதனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன. . அந்தக் கப்பல் முன்பு Kining Grud என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும், ரஷ்யாவின் எண்ணெய் போக்குவரத்துடன் தொடர்புடையதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் 2024 முதல் இதுவரையில் குறைந்தபட்சம் 5 ரஷ்யத் தொடர்புடைய 'நிழல் படை' (Shadow Fleet) எண்ணெய் கப்பல்களைப் பிடித்துள்ளது. பிரெஞ்சு கடற்படை கடைசியாக சிறைபிடித்த கப்பல் ஐந்தாவது நிகழ்வாகும். உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை மீறி, போலியான கொடிகளுடன் சட்டவிரோதமாக எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளமான X-இல், ’ரஷ்யாவின் நிழல் (கடத்தல் ) கப்பல் படைக்கு எதிராக, உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் உறுதியாக உள்ளது. சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட பிரான்ஸ் உறுதியாக இருப்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த கடத்தல் கப்பல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியைக் குறைக்கவும், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கட்டுப்படுத்தவும் மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
இதற்கிடையே ரஷ்யாவின் எல்லையில் அமைந்துள்ள நாடான லாட்வியாவுக்கு நேட்டோ அமைப்பின் உறுப்பினரான துருக்கி, F-16 போர் விமானங்களை அனுப்பியுள்ளது. இது ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.. ரஷ்யாவின் எண்ணெய் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும், நேட்டோவின் ராணுவத் தயார்நிலையும் ரஷ்யா–மேற்கத்திய நாடுகள் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளன.

