ட்ரம்ப்பின் போன் அழைப்புக்காக சர்வதேச மாநாட்டில் இருந்து வெளியேறிய புடின்!
செய்தியாளர்: ஜி.எஸ்.பாலமுருகன்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நவீன யுகத்துக்கான புதிய யோசனைகள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் இருந்து அழைப்பு வந்ததும் உடனடியாக மாநாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அப்போது பேசிய புடின், ட்ரம்ப் காத்திருந்தால் அவருடைய மனம் புண்படலாம்; தவறாக நினைக்க வேண்டாம் என்று பார்வையாளர்களிடம் கூறிவிட்டு மேடையை விட்டு வெளியேறினார். அந்த வீடியோ உலக அளவில் வைரலாக பரவி வருகிறது.
அதன்பின் புடினும் ட்ரம்பும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொலைபேசியில் உரையாடினர். அந்த உரையாடலில், உக்ரைன் போர் நிலை, அணு பாதுகாப்பு, மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி போன்றவை பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பேச்சில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். சர்வதேச மாநாட்டின் நடுவே ரஷ்ய அதிபர் புடின் வெளியேறுவது என்பது மிகவும் அபூர்வமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இது ட்ரம்ப் - புடின் உறவில் உள்ள நெருக்கத்தை மட்டும் அல்லாது, உலக அரசியல் முக்கியத்துவங்களை மீண்டும் வெளிப்படுத்துகிறது.