போர் நிறுத்தம் | புதின் மீது கோபம்.. எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பாக சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கருங்கடல் பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நலம் குறித்த கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அவர் விரைவில் இறந்துவிடுவதாகத் தெரிவித்திருந்தது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்று விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார்.
அவருடைய இந்தக் கருத்தை ஏற்காத அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஒத்துழைக்காவிட்டால் கூடுதல் வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”புடின் தெரிவித்திருக்கும் பதிலால், நான் அதிக கோபத்தில் இருக்கிறேன். நீண்டகாலம் ஆகியும் நீங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. உக்ரைனில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்கு ரஷ்யா மற்றும் என்னால் முடியவில்லை என்றால், அது ரஷ்யாவின் தவறு என்றே நினைக்கிறேன். அப்படி இருக்கக்கூடாது. ஆனால், அது ரஷியாவின் தவறு என நான் கருதினால், ரஷ்யாவில் இருந்து வெளிவரும் அனைத்து எண்ணெய்களின் மீது 2-வது முறையாக வரிகளை விதிக்கப் போகிறேன்” என எச்சரித்துள்ளார். மேலும் அவர், .”புதினிடம் இதுதொடர்பாகப் பேசுவேன். ஆனால், அவர் சரியான செயல்களை செய்கிறார் என்றால் மட்டுமே அது நடக்கும். நான் கோபத்துடன் இருக்கிறேன் என புதினுக்கு நன்றாக தெரியும்” என அவர் தெரிவித்துள்ளார்.