கையில் அணு ஆயுத பெட்டி.. பின்னால் கடற்படை.. உச்சிமாநாட்டில் புதின் Entry!
ரஷ்ய அதிபர் புதின், சீனாவில் நடைபெறும் (APEC) உச்சி மாநாட்டில் தனது அணு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பெட்டியுடன் கலந்து கொண்டது, உலக அரசியல் வல்லுநர்களால் வல்லரசு நாடுகளுக்கு மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்கள் காலாவதியாகி வரும் நிலையில், ரஷ்யாவின் அணுசக்தி அதிகாரத்தை புதின் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் - M.மீரா
சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் நடைபெறும் ஆபெக் (APEC) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாட்டின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பெட்டியுடன் (Nuclear Briefcase) வந்துள்ளார்.
ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்ட வீடியோ காட்சிகளில், மாநாடு நடக்கும் ஹோட்டலுக்கு வெளியே அதிபர் புதின் நடந்து வரும்போது, அவருக்குப் பின்னால் சீருடை அணிந்த ரஷ்ய கடற்படை அதிகாரிகள் இருவர் கைகளில் கருப்பு நிறப் பெட்டிகளைச் சுமந்து வருவது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அது அதிபரின் அணு ஆயுதப் பெட்டிதான் என்பதை அந்த அதிகாரிகள் புன்னகையுடன் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரஷ்ய அதிபரின் இந்த அணு ஆயுதப் பெட்டி "செகெட்" என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 11 கிலோ எடையைக் கொண்டதாகும். அமெரிக்க அதிபரின் "நியூக்ளியர் ஃபுட்பால்" (Nuclear Football) பெட்டியைப் போலவே, இந்தப் பெட்டியும் ரஷ்ய அதிபர் எங்குச் சென்றாலும் அவரது பாதுகாப்புப் படையினரால் அவருடனேயே கொண்டு செல்லப்படும்.
இந்தப் பெட்டியில் நேரடியாக அணு ஆயுதங்களை ஏவும் Button-கள் எதுவும் இல்லை. அது ரஷ்ய அதிபருக்கும், ராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் இடையே உள்ள முப்பரிமாண ரகசியத் தகவல் தொடர்பு முனையமாகும் (Communication Terminal).
இது அதிநவீன ரகசியத் தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டுள்ளது. அவசரக் காலங்களில் அணுசக்தித் தாக்குதலுக்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், நாட்டின் பாதுகாப்பு அமைப்பைக் கண்காணிக்கவும் இது பயன்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு அணு ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த மாநாடு நடப்பதால், புதினுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிர மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே அணுசக்திப் போட்டி நிலவி வரும் வேளையில், புதின் தனது அணு ஆயுதப் பெட்டியுடன் கேமராவில் தோன்றியிருப்பது உலக அரங்கில் கவனிப்பை ஏறப்டுத்தியுள்ளது.
புதின் தனது அணு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பெட்டியுடன் (செகெட்) வந்ததும், அது பொதுவெளியில் கேமராவில் காட்டப்பட்டதும் வல்லரசு நாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு 'சைலண்ட் வார்னிங்' (மறைமுக எச்சரிக்கை) மற்றும் அரசியல் உத்தி என்று சர்வதேச அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது.
உக்ரைன் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்கள் காலாவதியாகி வரும் வேளையில், ரஷ்யாவின் ராணுவ பலத்தையும் அணுசக்தி அதிகாரத்தையும் எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது" என்பதையும், எந்தச் சூழ்நிலையிலும் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அதிகாரம் தன் கைக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோருக்குப் புதின் மறைமுகமாக உணர்த்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

