\
Pete Hegseth & Trump
Pete Hegseth & Trump Reuters

ஈரான் போர்| அமெரிக்கா செய்த மெகா தவறு.. Whistleblower ஆன ராணுவ வீரர்!

ஈரான் தாக்குதல்: ராணுவ மேஜர் புகார் மூலம் அமெரிக்க அரசியல் பரபரப்பு
Published on: 
Summary

ஈரான் தாக்குதலில் 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தது, பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஏற்பட்டதாக ராணுவ அதிகாரி புகார் அளித்துள்ளார். ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமை குறித்து அவர் சாடியுள்ளார். இது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

ஈரான் போரின் போது அமெரிக்கா மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் பாதூகாப்பு ஏற்பாடுகள் மீது புதிய சர்ச்சை வெடித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளை உயர் அதிகாரிகள் புறக்கணித்ததாக, தாக்குதலில் உயிர் தப்பிய அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

iran war
iran warReuters

போரின் போது கடந்த மார்ச் 1ஆம் தேதி குவைத்தில் உள்ள ஷுஐபா துறைமுகப் பகுதியில் அமெரிக்க ராணுவம் அமைத்திருந்த தற்காலிக ராணுவ செயல்பாட்டு மையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் 6 அமெரிக்க ராணுவ ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரில் முதல் முறையாக உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் இவர்கள்தான்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்து உயிர் தப்பிய அமெரிக்க ராணுவ மேஜர் ஸ்டீபன் ராம்ஸ்பாட்டம் (Army Maj. Stephen Ramsbottom) , தற்போது அமெரிக்க அரசுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ராணுவ விவகாரக் குழுக்களிடம் கடந்த வாரம் இந்தப் புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனம் முதலில் செய்தி வெளியிட்டது. பின்னர் சிஎன்என் நிறுவனமும் புகார் ஆவணத்தைப் பெற்றுள்ளது.

iran war
iran war reuters

தாக்குதலுக்கு முன்பே, வான்வழித் தாக்குதல்களில் இருந்து வீரர்களைப் பாதுகாக்க போதிய ஏற்பாடுகள் இல்லை எனத் தான் பலமுறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக ராம்ஸ்பாட்டம் கூறியுள்ளார். ஆனால், பாதுகாப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை என அதிகாரிகள் பதிலளித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அந்த ராணுவ முகாமில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை நிறுவத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தாக்குதல் நடந்தபோது அந்த அமைப்பு அங்கு கொண்டுவரப்படவில்லை என்றும், அது முறையாக ஆர்டர் செய்யப்பட்டதா என்பதுகூடத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தாக்குதல் நடந்த இடத்தில் நிரந்தர மருத்துவ உதவி மையமோ, மருத்துவரோ இல்லை என்றும், ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே இருந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய ராம்ஸ்பாட்டம், இது அமெரிக்க ராணுவத்தின் திட்டமிடல் மற்றும் தலைமைப் பொறுப்பில் ஏற்பட்ட தோல்வி என்று விமர்சித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Pete Hegseth
Pete Hegseth Reuters

இதற்கிடையே, தாக்குதல் நடந்த கட்டடம் வலுவான பாதுகாப்புடன் இருந்ததாக அப்போது அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியிருந்தார். ஆனால், அந்த இடத்தைச் சுற்றி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வசதிகள் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்த விவகாரம் அமெரிக்க அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செனட் உறுப்பினர் ரிச்சர்ட் புளூமெந்தால், (Blumenthal) இந்த விவகாரம் தொடர்பாக பீட் ஹெக்செத் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அந்த ராணுவ முகாமின் பாதுகாப்பு ஆய்வு அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

ஈரான் தாக்குதலில் 6 வீரர்கள் உயிரிழந்ததற்கு எதிரி நாட்டின் தாக்குதல் மட்டும்தான் காரணமா அல்லது அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளும் காரணமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Pete Hegseth & Trump
ஈரானுக்கு வெற்றி.. அமெரிக்காவுக்கு பேரிடி.. அதிர்ச்சியில் உலக நாடுகள்!