\
Prince Harry  rejoin the military amid rising Russian threats.
prince harryreuters

போர் பதற்றத்தில் ஐரோப்பா! ராணுவத்தில் இணையும் இளவரசர்? ரஷ்யாவுக்கு எதிராகக் களமிறங்குகிறாரா?

ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, பிரிட்டன் இளவரசர் ஹாரி மீண்டும் ராணுவத்தில் இணையத் இருப்பதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அப்படி என்ன நடக்கிறது பிரிட்டனில்? விரிவாகப் பார்க்கலாம்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், இந்தப் போர் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான ரஷ்யாவின் அச்சுறுத்தல்களும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இத்தகைய சூழலில், பிரிட்டன் மன்னர் சார்லஸின் இளைய மகனான இளவரசர் ஹாரி வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

prince harry
prince harryreuters

ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாகப் பிரிட்டன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இளவரசர் ஹாரி, அங்கு போரில் காயமடைந்த ராணுவ வீரர்களைச் சந்தித்துள்ளார். அப்போது, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, The Telegraph நாளிதழின் Ukraine: The Latest பாட்காஸ்டுக்கு அளித்த பேட்டியில்தான் மீண்டும் ராணுவத்தில் இணையத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "மீண்டும் ராணுவத்தில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால், அதற்கான தேவை ஏற்பட்டால், எனது சக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தற்போது பணியாற்றி வரும் வீரர்களுடன் இணைந்து எனது நாட்டுக்காகப் பணியாற்ற நான் 100 சதவீதம் தயாராக இருப்பேன்" என்று கூறியுள்ளார். மேலும், தற்போதைய சர்வதேச அரசியல் சூழலைப் பார்க்கும்போது அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே ராணுவத்தில் பணியாற்றியவர்கள் மீண்டும் சேவையாற்றத் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

prince harry
prince harryreuters

பிரிட்டிஷ் ராணுவத்தில் இளவரசர் ஹாரி சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இரண்டு முறை ராணுவப் பணியிலும் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, அப்பாச்சி ரகத் தாக்குதல் ஹெலிகாப்டர் விமானியாகவும் பணியாற்றிய அவர், கடந்த 2015ஆம் ஆண்டு ராணுவப் பணியிலிருந்து விலகினார். அதன்பிறகு, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலைத் திருமணம் செய்துகொண்ட அவர், அரச குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் அரச பதவிகள் உட்பட்ட பொறுப்புகளில் இருந்து விலகி, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினார். தற்போது மீண்டும் தனது குடும்பத்துடன் இனைய விருப்பம் தெரிவித்து வரும் சூழலில் தனது நாட்டுக்காக மீண்டும் ராணுவத்தில் இணையத் தயாராக இருப்பதாக இளவரசர் ஹாரி தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Prince Harry  rejoin the military amid rising Russian threats.
இனி கைவெச்சா காலி.. ஈரான் எடுத்த திடீர் முடிவு! உச்சகட்ட அதிர்ச்சியில் அமெரிக்கா!