ஷேக் ஹசீனாவின் பொது நிகழ்வு.. கலந்துகொண்ட Ex கிரிக்கெட் கேப்டனுக்கு நேர்ந்த சோகம்!
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இடைக்கால அரசு அமைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அதேநேரத்தில், வன்முறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துமாறு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று பொதுவெளியில் தோன்றி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நான் கொல்லப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம்; சிறைக்கு அனுப்பப்படலாம். எனது தலைவிதி எனக்கு முழுமையாகத் தெரியும். இருப்பினும், என் மக்கள் என்னை அழைப்பதால் நான் வங்கதேசத்திற்கு டிசம்பரில் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்” என்றார். இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்குக் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.
இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் கலந்துரையால் நிகழ்வில் கலந்துகொண்ட வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹுசனின் வீட்டில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகுராவில் உள்ள அவரது இல்லம் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, கற்கள் வீசப்பட்டன. மேலும், பெட்ரோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அந்த வீட்டைச் சேதப்படுத்தியதோடு, தீ வைக்கவும் முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்பில் ஷகிப் கலந்துகொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது வங்கதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரராக கருதப்படும் ஷாகிப், ஹசீனாவின் அவாமி லீக்குடனான கட்சியின் சர்ச்சைக்குரிய நபராகவே இருந்து வருகிறார். அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து அவர் மீது பல குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்ததிலிருந்து வங்கதேசத்திற்குத் திரும்பாத ஷாகிப், அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டே ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். தனது தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால், திரும்பிவந்து சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக அவர் பலமுறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

