இரண்டு ஆண்டுகளில் முதன்முறை.. பொதுவெளியில் தோன்றும் ஷேக் ஹசீனா.. திடீரென கைவிரித்த இந்தியா!
இந்தியாவில் வந்து தஞ்சமடைந்த பிறகு, இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக டெல்லியில் இன்று நடைபெறும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கலந்துரையாடல் நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
அதேநேரத்தில், 2024ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 22 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டதுடன், ஹசீனாவின் செயல் மனித குலத்திற்கே எதிரானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அவரை வங்கதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு இந்தியாவிடம் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று, ஷேக் ஹசீனா உரையாற்றவுள்ளார். இன்று மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வை, தெற்காசிய வெளியுறவுச் செய்தியாளர்கள் அமைப்பு ஒருங்கிணைத்து நடத்துகிறது. அவர், இந்தியாவில் தஞ்சம் புகுந்து சரியாக 2 ஆண்டுகள் நிறைவடையும் நாளில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவில் தஞ்சமடைந்த, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் பொது நிகழ்ச்சிகளையோ, ஊடகச் சந்திப்புகளையோ முற்றிலுமாக ஷேக் ஹசீனா தவிர்த்து வந்த நிலையில், தற்போது உரையாற்ற இருப்பது வங்கதேச அரசியலுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் வங்கதேசத்திற்கு மீண்டும் திரும்புவது குறித்த தனது திட்டங்கள் பற்றி ஷேக் ஹசீனா பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்நிகழ்ச்சி சமூக வலைதளங்களிலும் நேரலை செய்யப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவின் கலந்துரையாடல் நிகழ்வுக்கும், இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக, ஷேக் ஹசீனா பங்கேற்கும் கலந்துரையாடல் தொடர்பாக அரசியல் சர்ச்சைகள் எழுந்த நிலையில், மத்திய அரசு தனது நிலையை அதிகாரபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

