பப்புவா நியூ கினி: மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட நிலச்சரிவு; மண்ணிற்குள் புதைந்த 670 மக்கள்!

பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 670 ஆக அதிகரித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் மக்கள்
மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் மக்கள் pt web

பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்திருக்கலாம் என புலம் பெயர்வோருக்கான ஐ.நா. முகமை தெரிவித்துள்ளது. எங்கா மாகாணத்தில் யம்பாலி எனும் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஏராமான வீடுகள், அவற்றில் உறங்கிக் கொண்டிருந்த மக்களுடன் மண்ணுக்குள் புதையுண்டன. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டிருப்பதாக ஐநா ஏஜென்சியின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட வீடுகள், ஒரு தொடக்கப்பள்ளி, சிறு வணிக நிறுவனங்கள், கடைகள், விருந்தினர் மாளிகை மற்றும் ஒரு பெட்ரோல் நிலையம் புதையுண்டுள்ளதாக இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 5 பேரின் உடல்களும் ஆறாவதாக ஒருவரது கால் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 670க்கும் மேற்பட்டோர் 6-ல் இருந்து 8 மீட்டருக்கு கீழ் மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பெரிதும் பாதிக்கப்பட்ட 3 கிராமங்களில் சுமார் 4 ஆயிரம் குடும்பத்தினர் வரை வசித்து வந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் 1250க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 250 வீடுகள் மக்களால் கைவிடப்பட்டுள்ளன.

தண்ணீர் பாட்டில்கள், உடைகள், அத்தியாவசியப் பொருட்கள், உணவு, தார்ப்பாய்கள் போன்றவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஐநா இடம்பெயர்வு அமைப்பின் தலைவரான அக்டோப்ராக் இதுதொடர்பாக கூறுகையில், “நிலம் இன்னும் சரிகிறது. பாறைகள் உருளுகின்றன. தொடரும் அழுத்ததின் காரணமாக நிலத்தடியில் விரிசல் ஏற்படுகிறது.இப்பகுதி அனைவருக்கும் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் மண் தோண்டும் உபகரணங்களையும், மண்வெட்டிகளையும் பயன்படுத்தி புதையுண்ட உடல்களை மீட்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com