நிதி நெருக்கடியில் தவிக்கும் நாடு.. மீண்டும் அதே தவறை செய்யும் பாகிஸ்தான்! மக்களின் நிலை?
அண்டை நாடான பாகிஸ்தான், கடந்த சில வருடங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால், அந்நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அத்துடன், சமீபத்தில் இந்தியாவுடன் நடைபெற்ற தாக்குதலிலும், அந்த நாடு ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் பாகிஸ்தான் உதவி கேட்டு நிற்கிறது. சமீபத்தில், சர்வதேச நாணய நிதியம் 2.4 பில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. தவிர, சீனா உள்ளிட்ட சில நாடுகளும் பாகிஸ்தானுக்கு கடன் உதவி செய்து வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் தனது பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை 20% உயர்த்தியுள்ளது. அதற்காக, இதர ஒட்டுமொத்த செலவினங்களைக் குறைத்துள்ளது.
பாகிஸ்தானில் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நிதியமைச்சா் முகமது ஔரங்கசீப் நேற்று தாக்கல் செய்தாா். அதன்படி, புதிய பட்ஜெட்டில் 2.55 டிரில்லியன் ரூபாய் ($9 பில்லியன்) பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2.12 டிரில்லியனில் இருந்து அதிகரித்துள்ளது.
இதில் இராணுவ ஓய்வூதியங்களுக்கு ஒதுக்கப்பட்ட 742 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ($2.63 பில்லியன்) விலக்கப்பட்டுள்ளது. இது முழு பாதுகாப்பு பட்ஜெட்டையும் 3.292 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ($11.67 பில்லியன்) ஆகக் கொண்டுள்ளது. பட்ஜெட்டில் உபகரணங்கள் மற்றும் பிற உடல் சொத்துக்களுக்கான செலவுகளில் 704 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயும் ($2.5 பில்லியன்) அடங்கும். கடந்த காலங்களில் குறைந்த அளவிலேயே பாதுகாப்புத் துறைக்கு நிதியை ஒதுக்கிவந்த பாகிஸ்தான், இந்த முறை அதிக அளவில் ஒதுக்கியிருப்பது உலக நாடுகளை எதிர்பார்ப்புக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும், தற்போதைய பட்ஜெட்டில் அதிகபட்ச செலவினமாக கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதர ஒட்டுமொத்த செலவினங்கள் 7 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தைவிட, இந்திய ராணுவம் பலமாக உள்ளது. தவிர, இந்திய ராணுவத்துக்கு மத்திய அரசு பாகிஸ்தானைவிட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதையடுத்தே, பாகிஸ்தானும் தன்னுடைய பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்தும் நோக்கில் நிதியை அதிகளவில் ஒதுக்கீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.