”பிச்சை பாத்திரத்துடன் செல்வதை நட்பு நாடுகள் விரும்பவில்லை” - பாகிஸ்தான் பிரதமர்
அண்டை நாடான பாகிஸ்தான், கடந்த சில வருடங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால், அந்நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் பாகிஸ்தான் உதவி கேட்டு போய் நிற்கிறது. சமீபத்தில், சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியுள்ளது. ஆனால், இந்த நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்குப் பயன்படுத்துவதாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. தவிர, அந்த நிதியை வழங்காமல் இருக்கவும் தடை கோரி வருகிறது. எனினும், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கடன் உதவி செய்து வருகின்றன.
இந்த நிலையில், ”பிச்சைப் பாத்திரத்துடன் செல்வதைக்கூட உலக நாடுகள் விரும்பாது” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பாகிஸ்தானின் மிகவும் நட்பு நாடாகவும், சோதனையான காலகட்டத்திலும் உற்ற நண்பனாகவும் சீனா உள்ளது. அதேபோல, பாகிஸ்தானின் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க கூட்டாளியாக சவூதி அரேபியா உள்ளது. இதேபோன்று துருக்கி, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் உள்ளன.
ஆனால், இங்கு ஒன்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வர்த்தகம், வணிகம் புதுமை, ஆய்வு, மேம்பாடு, கல்வி, சுகாதாரம், முதலீடு என பரஸ்பரம் லாபம் அளிக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பிச்சைப் பாத்திரத்துடன் நாம் அவர்களிடம் செல்வதை எதிர்பார்க்கவில்லை. நமக்கு இயற்கை மற்றும் மனித வளத்தை அளித்து இறைவன் ஆசிர்வதித்துள்ளான். அதை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இவற்றைப் பயன்படுத்தி லாபத்தை ஈட்டும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மேலும் இந்தச் சுமையை எங்கள் தோள்களில் சுமக்கும் கடைசி நபர் நானும், அசீர் முனீரூம்தான். எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கு இயற்கை மற்றும் மனித வளங்களை வழங்கி ஆசீர்வதித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா பிரமோஸ் ஏவுகணைகள் மூலம் தங்கள் நாட்டைத் தாக்கியதாக அவர் ஒப்புக் கொண்டார். தற்போது நிதியுதவிக்காக பாகிஸ்தான் பிச்சைப் பாத்திரம் ஏந்துவதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.